தமிழீழ வைப்பகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பலகோடி பெறுமதியாக தங்க நகைகளுக்கு நேர்ந்ததென்ன,தமது நகை தமக்கு கிடைக்கும் என தமிழ் மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆகவே கைப்பற்றிய தங்கங்களை இலங்கை அரசாங்கம் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில் வன்னி பகுதியில் இருந்து எமது தேசத்தின் அரசு கோலோச்சிய பகுதியில் இருந்து பல கோடி பெறுமதியான தங்கங்கள் மீட்கப்பட்டு அவை கொழும்புக்கு கொண்டு வரப்பட்டன. தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த மற்றும் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தங்கங்கள் பாதுகாப்பான முறையில் உரியவர்களின் பெயர் மற்றும் முகவரி குறிக்கப்பட்டு,பாதுகாப்பாக பொதியிடப்பட்டிருந்ததாக அரசாங்கம் அப்போது அறிவித்திருந்தது.
இவ்வாறு இலங்கை அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் தமக்கு மீளவும் கிடைக்கும் என தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள்.ஆனால் இன்று வரை உரியவர்களுக்கு அவர்களின் தங்கம் கையளிக்கப்படவில்லை.தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த தங்கம் பற்றி வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் என்னை தொடர்புக்கொண்டு ‘தமது நகைகளுக்கு நேர்ந்தது என்ன,அவை கிடைக்காது’ என்று வினவினார்.
கைப்பற்றப்பட்ட தங்கங்களுக்கு என்ன நேர்ந்தது. ஏன் உரியவர்களிடம் கையளிப்படவில்லை.ஆகவே உரியவர்களிடம் அவர்களின் நகைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.