Ad Widget

தமிழினிக்கு தலைவணங்கும் தென்மாகாண ஆளுநர்!

சமூகங்களில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் உண்மைகளைத் தனது நூலின் மூலம் வெளிக்கொணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணி பொறுப்பாளர் தமிழினி ஜெயக்குமாரனுக்கு தலைவணங்குகின்றேன் என தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சேர்.பொன்.இராமநாதனின் ஜனன தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி காலிநகரில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு தொடர்பாக நேற்றையதினம் (வியாழக்கிழமை) மீள் குடியேற்ற அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் மாவீரர் தினம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தலைவியாக இருந்த தமிழினி ஜெயக்குமாரன் புற்றுநோயாளியாக இருந்த சமயம் எழுதிய நூலான ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலை நீங்கள் அனைவரும் வாசித்திருப்பீர்கள். அவர் குறித்த நூலின்மூலம் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். அதற்காக நான் அவருக்குத் தலைவணங்குகின்றேன். சமூகத்தில் காணப்படும் தவறான கண்ணோட்டத்தையும் முரண்பாடுகளையும் தீர்க்கும் வகையில் அந்நூல் அமைந்துள்ளது.

எமது சகோதரத்துவத்தை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். தங்களுடைய கலாசாரம் மற்றும் அடையாளத்தை பேணிப்பாதுகாப்பது தமிழ் மக்களது உரிமை. அதேபோன்று ஒவ்வொரு மத்தினருக்கும் அவர்களது அடையாளத்தை பாதுகாப்பதற்கு உரிமை உண்டு. ஆனால், இன முரண்பாடுகளையும் உருவாக்கி அவற்றை தாழ்மைப்படுத்திவிடக் கூடாது.

யுத்தத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என சகல இனத்தையும் சேர்ந்த இராணுவத்தினர் உயிரிழந்தனர். மூவின மக்களும் உயிரிழந்தனர். விடுதலைப் புலிகளும் உயிரிழந்தனர். இவர்கள் ஒவ்வொருவரது உயிரும் விலைமதிப்பற்றது. ஆகவே கடந்த 32 வருட காலமாக நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூருவதற்காக இன, மத, மொழிகளை மறந்து ஒரு பொதுவான தினத்தை நாம் ஏற்பாடு செய்வது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார்.

Related Posts