Ad Widget

தமிழர் நலனில் அக்கறை கொண்டு அரசும், மாகாண சபையும் உடனடியாக இணைந்து செயற்படுங்கள் – யாழ் ஆயர்

வடக்கு கிழக்கு மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு மத்திய அரசும் வடக்கு மாகாண சபையும் உடனடியாக இணைந்து செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

jaffna-ayar-thomas

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் , வடமாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரனையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடிய பின்னரே இருவருக்கும் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஆயர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் நடைபெற்ற இலங்கை ஆயர் பேரவையின் கூட்டத்தொடரின் இறுதியில் இலங்கை ஆயர்கள் இணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்தோம்.

அங்கு ஆயர்களாகிய நாம் தற்போதைய நாட்டின் நெருக்கடிகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினோம். குறிப்பாக பொதுபல சேனாவுடைய அத்துமீறிய செயற்பாடுகள், இராணுவத்தின் நில அபகரிப்புப் போன்ற விடயங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

யாழ் ஆயர் என்ற முறையில் நான் குறிப்பாக இரு விடயங்கள் பற்றி ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினேன். முதலாவதாக, போர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் மாகாண சபை நிறுவப்பட்டு ஓராண்டுகள் கடந்தும் சில அபிவிருத்தி நடவடிக்கைகளை தவிர்ந்த வேறு எந்த வித அரசியல் தீர்வுகளும் தமிழர்களுக்கு முன்வைக்கவோ கொடுக்கப்படவோ இல்லை.

அத்துடன் இரண்டாவதாக, தமிழர் குடிநிலங்களும், அவர்களது வணக்கத் தலங்களும் இராணுவத்தின் நில அபகரிப்புக்கு உள்ளாவதும் மிக வேதனைக்குரியது என தெரிவித்தேன்.

மாகாண சபையினரோ முதலமைச்சரோ அரசுடன் இணைந்து செயற்பட முன்வருவதில்லை. கொடுக்கப்படுகிற அழைப்புக்களை ஏற்று எந்தக் கூட்டங்களுக்கும் சமூகம் கொடுப்பதில்லை, அவர்கள் அரசுடன் இணைந்து செயற்படாதவரை எம்மால் எதையும் செய்ய முடியாது.

மக்கள் குடியிருப்புக்கள் ஒருபோதும் அபகரிக்கப்பட மாட்டாது அந்த நிலப்பரப்பு தற்போது அளவிடப்பட்டு வருகின்றது. விரைவில் உரியவர்களுக்கு சொந்த நிலங்கள் வழங்கப்படும். மக்களின் வணக்கத் தல பிரதேசங்களும் விரைவில் மீளக் கையளிக்கப்படவுள்ளது என ஜனாதிபதியின் பதில் அமைந்திருந்தது.

அதனையடுத்து முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண சபையினரை யாழ் ஆயர் இல்லத்தில் சந்தித்து ஜனாதிபதி உடனான சந்திப்பின் விடயங்களை தெரிவித்தேன்.

அதனையடுத்து முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார். பல முறை பல கூட்டங்களுக்குச் சென்று எந்தவித ஆக்கபூர்வமான விடயங்கள் எவையும் செயற்படுத்தப்படவில்லை.

தமிழர்களது அபிலாசைகள் எதையும் பூர்த்தி செய்யவேண்டும் என்ற எண்ணமும் அரசிடம் தென்படவில்லை. எனவேதான் நாம் அரசின் அழைப்பை நிராகரிப்பதற்குரிய காரணமாயிற்று என்றார்.

எனவே தமிழர்களின் எதிர்கால நலனையும் அபிலாசைகளையும் கருத்தில் கொண்டு அரசும் மாகாண சபையினரும் ஒருவருக்கு ஒருவர் பிழைகளைக் காண்பதைத் தவிர்த்து உடன் செயற்பட வேண்டிய அவசர தேவை இன்று உள்ளது.

எனவே இரு தரப்பினரும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts