Ad Widget

தமிழர்களுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கும் என்று அரசுக்கு அச்சம் – அனந்தி

ananthi_sashitharanதமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்ட நிலைமைகளை வெளியில் கொண்டு வருவதனால், சர்வதேச ரீதியில் கிடைக்கும் ஆதரவுக்கு அரசாங்கம் பயந்துள்ளது. இதனாலேயே, ஊடகத் தணிக்கை, ஊடகக் கட்டுப்பாடு ஆகியவை விதிக்கப்படுகின்றன என்று வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்புக்கு சென்ற ஊடகவியலாளர்களை ஓமந்தையில் வைத்து கஞ்சா கடத்துவதாக குற்றஞ்சாட்டி அவர்களின் பயணத்தை தடுக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து அனந்தி சசிதரனினால் இன்று திங்கட்கிழமை விடுத்தக்கட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஊடகத் தணிக்கை மற்றும் ஊடகக் கட்டுப்பாடு இரண்டையும் விதிப்பதற்கு அப்பால், பல ஊடகவியலாளர்களை கொலை செய்தும், கடத்தி காணாமற் போகச்செய்தும், ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்களை நடத்தியும் பல்வேறு நெருக்கடிகளை ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கம் விடுத்து வருகின்றது.

தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை வெளியே கொண்டுவரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் ஊடகவியலாளர்களை சிறையில் அடைக்கும் திட்டமிட்ட சதியாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது.

யுத்த காலத்தில் இந்த நிலைமை கடினமாக இருந்த போதும்கூட, ஊடகங்களின் செயல் இன்றியமையாததாகவே காணப்பட்டது. ஏனெனில் முள்ளிவாய்க்காலில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் இவ்விதமான ஊடகவியலாளர்களால் வெளிக்கொணரப்பட்டன.

இதனை கருத்திற்கொண்டே, இன்று சர்வதேச ரீதியாக பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசாங்கம், ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் தடுத்த வண்ணம் உள்ளது. இது இலங்கையில் சட்ட, ஜனநாயக நிர்வாக ஆட்சிமுறைமை இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

இந்த நாடு தென்கிழக்காசியாவிலே மிக மோசமான ஊடக அடக்குமுறையை மேற்கொள்வதில் முன்னிலை பெறுகிறது. இவ்வாறு ஊடகவியலாளர்களை போதைவஸ்து பொருட்களை வைத்து அடக்க முயற்சிக்கும் அரசு, எங்களைப்போன்ற தமிழ்த் தேசிய இன உணர்வாளர்களுக்கு எவ்விதமான திட்டத்தை வகுத்துக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகின்றது.

ஆகவே, இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பது வெறும் கேலிக் கூத்தாகும். இராணுவ பிரசன்னமும் அடக்குமுறையுமே சிவில் நிர்வாகத்தின் நடைமுறையாக உள்ளது. இந்த நிலைமைகள் எல்லாம் எப்போது மாற்றமடையப்போகின்றது என்ற ஏக்கம் தமிழ் மக்கள் மத்தியில் எழுகின்றது.

எனவே ஊடக அடக்குமுறை, ஊடகவியலாளர் மீதான வன்முறைப் பிரயோகம் ஆகியன நிறுத்தப்பட வேண்டும். ஊடக சுதந்திரத்திக்கு வாய்ப்பளிக்க வேண்டிய ஏதுநிலையை உருவாக்குவதோடு நல்லாட்சித்துவ அடிப்படையில் இலங்கை செயற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்’ என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts