Ad Widget

தமிழர்களின் வளர்ச்சிக்கு கல்வி முக்கியமானது – வீ.இராதாகிருஸ்ணன்

எந்த இனத்தின் வளர்ச்சிக்கு ஏதாவதொரு விடயம் முக்கியமானதாக இருந்தாலும் கல்வி முக்கியமானதொன்று. தமிழர்களின் வளர்ச்சியில் கல்வியின் வளர்ச்சி மிகவும் அவசியமாகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

rathakirishnan-veluchchamy-edu

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை வியாழக்கிழமை (26) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

‘வடமாகாணத்தின் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட ஆய்வுகூடங்களை வடமாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் திறந்து வைக்கவேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைய விடயங்களை நாங்கள் கவனிக்க வேண்டியிருப்பதால் எல்லா இடமும் நாங்கள் சென்று திறந்து வைக்கமுடியாது.

கடந்த அரசாங்கம் செய்த இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் அமைக்கும் திட்டத்தை வரவேற்கின்றோம். 30 வருட யுத்தகாலத்துக்கு பின்தள்ளப்பட்டு முன்னேறி வருகின்ற சமுதாயமாக வடமாகாணம் இருக்கின்றது. மலையகம் இதனைவிட மோசமாக இருப்பது என்பதும் உங்களுக்கு தெரியும். அங்கு கல்வி நிலையும் பின்தங்கி இருக்கின்றது. வடமாகாணத்தின் கல்வியை முன்னேற்ற வேண்டியது வடமாகாண கல்வி அமைச்சிடம் இருக்கின்றது. வடமாகாணத்தை முன்னேற்ற வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கின்றது.

இலங்கையில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி மிகவும் குறைவாக இருந்தது. முன்னைய அரசாங்கம் பாதுகாப்புக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்தது. கல்விக்காக 1 வீத அளவிலேயே ஒதுக்கியது. எங்கள் அரசாங்கத்தில் கல்விக்காக 6 வீதம் ஒதுக்கப்படவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம். அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். கூடியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் மாகாண ரீதியிலான கல்வியை முன்னேற்ற முடியும்.

மாகாண அரசு ஒருபக்கமும், மத்திய அரசு ஒரு பக்கமும் நின்றால், எவ்வித முன்னேற்றகரமாக காரியங்களையும் செய்ய முடியாது. இரண்டும் இணைந்து செயற்படும் போது தான் வெற்றியிருக்கின்றது. வடமாகாணத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு தளபாடங்கள், புத்தகங்கள், மதிய உணவு என்பன வழங்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். பாடசாலை மாணவர்களின போசனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாகாண கல்வி அமைச்சிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவுடன் கலந்துரையாடி குறைகள் நிவர்த்தி செய்யப்படும். தேவைகள் குறைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடம் கலந்துரையாடுவோம். பாடசாலைகளிலுள்ள குடிநீர், மலசலகூட வசதிகள் என்பன ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

Related Posts