Ad Widget

தமிழரின் நீதிக்குரல் ஐ.நா. வரை ஒலிக்க அணிதிரளுங்கள்!- சி.வி. வலியுறுத்தல்

எமது மக்களின் நீதிக்கான குரலை ஐ.நா. வரை ஒலிக்க செய்வதற்கு அணிதிரளுமாறு வட. மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பாகநேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ் முற்றவெளிக்கு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படவுள்ளது. அதேபோன்று எதிர்வரும் 19ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பினால் மட்டக்களப்பில் கதவடைப்பு மற்றும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். அடிக்கடி நடைபெறும் கதவடைப்பு போராட்டங்களும் ஆர்ப்பாட்ட பேரணிகளும் மக்களின் வாழ்க்கையை பாதித்து பொருளாதார செயற்பாடுகளையும், நாளாந்த வருவாய்களையும் பாதிக்கும்.

ஆனால், அதனை ஒரு பொருட்டாக கருதாமல் எமக்கு எதிரான இனப்படுகொலைகளையும், அடக்குமுறைகளையும் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்ல இவ்வாறான சாத்வீக போராட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

அரசாங்கம் ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றாமல் ஏமாற்று வித்தைகளில் ஈடுபட்டுவருகின்ற போதிலும் நாம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் இத்தகைய போராட்டங்கள்தான் ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்தின் மனசாட்சிக் கதவுகளைத் தட்டி எழுப்புவனவாகக் காணப்படுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts