Ad Widget

தமிழரின் ஒற்றுமையை சீர்குலைக்கவில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழரின் ஒற்றுமையை தான் சீர்குலைக்கவில்லையென்றும், மாறாக மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் அறியாமையை சீர்குலைக்க முயற்சிக்கின்றேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவலத்திற்கும், அஸ்தமனத்திற்குமே ஒற்றுமை வழிவகுக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாராந்தம் ஒரு கேள்விக்கு பதிலளித்து வருகின்றார்.

அதன்படி இந்த வாரம் தமிழர் ஒற்றுமையை குலைப்பதைத் தவிற, எந்த அடிப்படையில் உங்கள் கட்சி ஏனையவற்றிலிருந்து வேறுபடுமென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், தான்தோன்றித்தனமாகக் கட்சியின் தலைமைத்துவம் நடந்து கொண்டாலும் ஒற்றுமையை முன்னிட்டு வாய் மூடிக்கொண்டு இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்களா என கேள்வியெழுப்பியுள்ளார்.

எமது ஒற்றுமை என்பது மற்றவர்கள் மதிப்பதான ஒற்றுமையாக இருக்க வேண்டுமே தவிற, தனிப்பட்ட நன்மைகளைப் பெறுவதற்காக நாம் ஒற்றுமையாக செயற்பட்டால் எவரும் மதிக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கணிதத்தில் மேம்பட்ட, கல்வியில் மேம்பட்ட எம்மவர்கள், பசப்பு வார்த்தைகளுக்கும், மாய்மாலங்களுக்கும் அடிமையாகிவிடுகின்றனரென குறிப்பிட்ட முன்னாள் முதலமைச்சர், அவர்களிடம் குடிகொண்டிருக்கும் ஆணவமும், செருக்குமே அதற்குக் காரணமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானவர்களை நாம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் அவர்களுக்கு எமது ஒற்றுமை என்பது ஒரு பொருட்டாகாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், கொள்கையின் அடிப்படையில் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து போராடுவதாகவே உண்மையான ஒற்றுமை அமைய வேண்டும் என்ற பாடத்தை மக்களுக்குப் புகட்டி வருவதாகவும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Posts