Ad Widget

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாநாட்டிற்கு சென்றவர்களை இராணுவத்தினர் திருப்பியனுப்பியுள்ளனர்

வவுனியாவில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு வன்னியிலிருந்து சென்றவர்களை இராணுவத்தினர் போலிக் காரணங்களைக் கூறி விசாரணை செய்து தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

vicky-vickneswaran-cm

வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வன்னியின் புதுக்குடியிருப்பு, நெடுங்கேணி, கனகராயன்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து சென்ற கட்சி ஆதரவாளர்களை இராணுவத்தினர் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். போலிக் காரணங்களைக் கூறி அவர்களைத் தொடர்ந்தும் பயணிக்க விடாது தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் குறித்த மாநாட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது எனக் கூறி அவர்களைத் திருப்பியனுப்பியுள்ளனர்.

இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடானது மிகவும் கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தில் இராணுவத்தினர் தலையிட்டு அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். வடக்கு மாகாணத்தில் மக்களின் சிவில் நடவடிக்கையில் இராணுவத்தினரின் குறுக்கீடுகள் அதிகமாகவுள்ளன என நான் அடிக்கடி சுட்டிக்காட்டுவதற்கு இச்சம்பவம் மற்றுமொரு எடுத்துக்காட்டாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Posts