Ad Widget

தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கு உதவ வேண்டும்!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கை அகதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. எனவே, இம் மக்களுக்கு உதவ இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கைவிடுத்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக அக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,

தமிழகத்தில் தொடரும் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கை தமிழ் அகதிகள் தங்கியிருக்கின்ற கே.கே. நகர், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, அண்ணாநகர், திருவான்மியூர், போரூர், செட்டிவாக்கம், வளசரவாக்கம், நெசப்பாக்கம் போன்ற பகுதிகள் பலத்த பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளன.

இதன் காரணமாக அம் மக்கள் பல்வேறு துயரங்களுக்கு உட்பட்ட நிலையில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அம் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts