Ad Widget

தப்பிச் சென்றிருந்த பாலியல் துஷ்பிரயோக குற்றவாளி மூன்றாண்டுகளின் பின் சிக்கினார்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2014 ஆம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் 3 ஆண்டுகளின் பின் கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கான தண்டனைத் தீர்ப்பு வரும் 9ம் திகதி வழங்கப்படும் எனவும் அன்றுவரை குற்றவாளியை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டார்.

சாவகச்சேரியில் கடந்த 2007ம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரும் அவருக்கு உதவிய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று சந்தேகநபர்கள் இருவருக்கு எதிராகவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகளின் நிறைவில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்கு முதலாவது எதிரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அவருக்கு உதவிய குற்றத்துக்கு இரண்டாவது எதிரிக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையையும் வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

இரண்டாவது எதிரி தலைமறைவாகியதால் அவரைக் கைது செய்ய பொலிஸாருக்கு மேல் நீதிமன்று கட்டளை வழங்கியது.

இந்த நிலையில் 3 ஆண்டுகளின் பின் இரண்டாவது எதிரி கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை நேற்று (04) வரை விளக்கமறியலில் வைத்திருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் குற்றவாளி நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு தண்டனைத் தீர்ப்பு வாசித்துக் காண்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே தண்டனைக் காலம் ஆரம்பிக்கப்படும்.

தற்போது மேல் நீதிமன்ற பருவகால விடுமுறை நடைமுறையில் உள்ளதால் குற்றவாளியை வரும் 9ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

Related Posts