Ad Widget

தனது மகள் நின்மதியாக வாழ வேண்டும் : யாழ்.மேல் நீதிமன்றில் தாய் மன்றாட்டம்

தன் மகள் சந்தோசமா வாழுகிறாள் அவளின் வாழ்க்கை சீரழிய கூடாது. எனக்கு எந்த விதமான நஷ்ட ஈடுகளும் தேவையில்லை. என் மகள் சந்தோசமா வாழ வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணொருவரின் தாயார் யாழ்.மேல் நீதிமன்றில் மன்றாட்டமாக கோரினார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான கால பகுதியில் 16 வயதுக்கு குறைவான பெண் பிள்ளை ஒருவரை அவரின் சட்ட ரீதியான பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து சென்றமை மற்றும் அக்கால பகுதியில் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை ஆகிய குற்ற சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் செவ்வாய்க் கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது போதே பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நீதிமன்றில் முன்னிலையாக இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அவர் தொடர்ந்து மன்றில் தெரிவிக்கையில் ,

எனது மகள் தற்போது திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் இந்த வழக்கில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்க விரும்பவில்லை. அவர் தற்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றார். அந்த வாழ்க்கை சீரழிய கூடாது என மன்றில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து எதிரி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி கருணை விண்ணப்பம் செய்தார். அதன் போது அவர் குறிப்பிடுகையில், அந்த கால பகுதியில் இவருக்கு 24 வயது அந்த பெண் பிள்ளை மீது காதல் கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் அந்த பெண்ணின் சுய விருப்பத்தின் பேரில் தான் அவரை வீட்டை விட்டு அழைத்து சென்று வாழ்ந்துள்ளனர். அப்போது அந்த பெண் 16 வயதை தாண்டி விட்டார் என்றே எண்ணி இருந்தார். அதற்காக மன்னிப்பு கோருகின்றார்.

அந்த பெண் 18வயதை தாண்டியதும் அவரை சட்ட ரீதியாக திருமணம் செய்யவே எண்ணி இருந்தார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் வேறு நபர்களை திருமணம் செய்து தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர் தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாக உள்ளார். எனவே இவரின் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு இவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரி விண்ணப்பம் செய்தார்.

அதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பளிக்கையில் , இந்த வழக்கு 12 வருடங்களின் பின்னர் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. எதிரி குற்றத்தை ஏற்றுக்கொண்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தற்போது நிம்மதியான வாழக்கையை வாழ்கின்றார். அவர் இது தொடர்பில் சாட்சியம் அளிக்க விரும்பவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மன்றில் தெரிவித்து உள்ளார்.

அதன் அடிப்படையில் முதலாவது குற்றமான ஆட்கவர்தல் குற்றத்திற்காக எதிரிக்கு 05 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , 5 ஆயிரம் தண்ட பணமும் , கட்ட தவறின் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கிறேன்.

இரண்டாவது குற்றமான பாலியல் வன்புணர்வு குற்றத்திற்கு 05 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , 05 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் கட்ட தவறின் ஒரு வருட சிறைத்தண்டனையும் , பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் அதனை கட்ட தவறின் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் நஷ்ட ஈட்டு தொகையினை பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் அதனை அரச நிதியில் சேர்க்குமாறு நீதிபதி உத்தரவு இட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நஷ்ட ஈட்டு தொகையினை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தமையால் நஷ்ட ஈட்டு தொகை அரச நிதியில் சேர்க்கபட்டது.

Related Posts