Ad Widget

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் “உலகை வெல்லும் வழி” தேர்தல் விஞ்ஞாபனத்தினை வரவேற்கின்றோம் – ஈபிடிபி

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் “உலகை வெல்லும் வழி”எனும் மகுடத்துடனான தேர்தல் விஞ்ஞாபனம் எமது மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியுள்ளதனால் அதனை வரவேற்கின்றோம். என ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

EPDP flag

இது தொடர்பில் அவர்களால் வெளியீட்டுள்ள அறிக்கையில்…

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் “யாரைஆதரிக்கவேண்டும் ” என்ற தலைப்பில் எமது மக்களுக்கு நாம் கூறிய கருத்துக்கள் நிதர்சனமானவை என்பதை காலம் மீண்டுமொருமுறை உணர்த்தியிருக்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் மீண்டும் ஜனாதிபதியானால் எமது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார் என்று நாம் கூறினோம். எமது மக்களின் பிரதான தேவைகளை பத்து அம்சக் கோரிக்கையாக நாம் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தோம்.

அதில் அரசியல் தீர்வு, இழந்த நிலங்களை மீளப்பெறுவது, அர்த்தபூர்வமான மீள் குடியேற்றம், இழப்புக்களுக்கான போதிய நட்டஈடு, இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு, அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட தேசத்தின் மகுடம் திட்டத்தை வடக்கில் நிறைவேற்றுதல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்தும் திட்டம், சகல மதங்களையும் அனுசரிப்பதற்கான பூரண சுதந்திரம், சமூக ஒற்றுமைக்கான பாதுகாப்பு போன்ற முக்கியமான எமது கோரிக்கைகளை ஜனாதிபதி தனது மகிந்தசிந்தனையின் மூன்றாவது கட்டமான “உலகை வெல்லும் வழி” எனும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கரிசனையோடு உள்வாங்கி இருப்பதை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.

நாம் ஏற்கெனவே கூறியதுபோல் அரசியல் ரீதியான அழுத்தங்களையும், எதிர்ப்புக்களையும் துணிச்சலோடு எதிர்கொண்டு இந்த நாட்டின் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருகின்ற ஆளுமைமிக்க தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கின்றார். ஆகவே அவரைத் தமிழ் மக்கள் முழுமையாக ஆதரித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். அவரின் வெற்றியில் தமிழ் மக்களும் பங்காளர்கள் என்ற வலிமையான செய்தியை தென்னிலங்கைக்கு நாம் தெரிவிக்கவேண்டும்.

“உலகை வெல்லும் வழி” எனும் வரவேற்புக்குரிய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் எமது கோரிக்கைகளையும், அதில் உள்ளடக்கப்பட்டிருக்காத எமக்குரிய விடயங்களையும் செய்து முடிப்பதற்கு நாம் அவரின் வெற்றியின் பங்காளிகளாவது அவசியமாகும்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்களுக்குத் தெளிவான வழியைக் காட்டத் தெரியாமல் இரகசியப் பேச்சுக்களையும், பொய்களையும் கூறி மக்களை ஏமாற்றும் போலி அரசியல்வாதிகளை இன்றைய யதார்த்தம் தோலுரித்து அம்பலப்படுத்தியிருக்கின்றது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம், எமது மக்களுக்குச் சரியான பாதையினையே காட்டி வருகின்றோம். அதில் அழிவுகள் இல்லை. பொய்கள் இல்லை. அழிவு யுத்தம் ஏற்படுத்திய இழப்புக்களில் இருந்து விரைவாக மீண்டு எழுவதற்கும், எமது வாழ்விடங்களை முழுமையான அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவதற்கும், கௌரவமான அரசியல் தீர்வை நடைமுறையில் பெறுவதற்கும் எமது முழுமையான அர்ப்பணிப்பைச் செய்து வருகின்றோம்.

ஆகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நம்பிக்கையோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நாம் ஆதரவளித்து அவரது வெற்றியில் பங்காளிகளாவோம்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts