Ad Widget

ஜனாதிபதியின் நற்செயலை பாராட்டுகின்றது தமிழர் விடுதலைக் கூட்டணி

தனியாக யாழ்ப்பாணத்துக்கு வந்து வித்தியாவின் தாயரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராட்டுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெள்ளிக்கிழமை (29) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாடசாலைக்கு சென்ற 17 வயது மாணவி வித்தியா கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அப்பாவி மாணவியின் வீட்டாருக்கு சம்பிரதாயங்களை மீறி அமைச்சர்கள் எவரின் உதவியுமின்றி தனியாக யாழ்ப்பாணத்துக்கு சென்று தனது மற்றும் அரசு சார்பிலும் அனுதாபம் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். எமது காலத்தில் நடந்தேறிய குற்றச்செயல்களில் கொடூரமான செயல் இதுவாகும்.

நாட்டு மக்கள் இன, மத பேதமின்றி சகல துறைகளையும் சேர்ந்தவர்கள், பல்வேறு வயதுடைய ஆண் பெண் பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் அனைவரும் நாடளாவிய ரீதியில் கிளர்ந்தெழுந்து தமது ஆதங்கத்தையும் வெளி உலகுக்கு எடுத்துக்காட்டினர்.

இனமத பேதமின்றி, நாட்டவர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டமை, உலக நாடுகளாலேயே நம்ப முடியவில்லை. வித்தியா நம் நாட்டு பாடசாலை பிள்ளைகளுக்கு அக்காவாகிவிட்டார். தற்போது அவர் பற்றி பேசும் போது அக்காவெனவே குறிப்பிடுகின்றனர்.

துரஷ்டவசமாக தற்போது அவர் எம்மத்தியில் இல்லாதபோதும் எமது பெண் பிள்ளைகளுக்கு தன் உயிரை அர்ப்பணித்து இன, மத பேதமின்றி அவர்களுக்கு ஓர் சிறந்த வழிகாட்டியாகி விட்டார். நாடு பூராவும் வித்தியா மீது காட்டும் அனுதாபங்கள் அவரை முழு இலங்கைக்கும் ஓர் ஒற்றுமையின் சின்னமாக எடுத்துக் காட்டுகின்றது. அவரை ஓர் தியாகியாக ஏற்றுக்கொண்டால் கூட மிகையாகாது.

ஜனாதிபதி, இலங்கை மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய ஓர் சிறந்த தலைவராக அடையாளம் காட்ட உதவியவர் வித்தியா. எல்லாவற்றுக்கும் மேலாக பெண்பிள்ளைகளுக்கு வேம்படியில் கொடுத்த உறுதிமொழியும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவ முன்வந்தமையும் ஜனாதிபதி பற்றிய எமது கருத்துக்களுக்கு மேலும் வலு சேர்க்கின்றன என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts