Ad Widget

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு தலையிடாது தமிழ்மக்களை அவர்களது விருப்பப்படி வாக்களிக்க விடவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் தலையிடாது ஒதுங்கி இருந்து கொண்டு தமிழ் மக்களை அவர்களின் இஷ்டப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிடவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்திக் கேட்டுள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

anantha-sankaree

அந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:-

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை சரித்திரத்தில் நடைபெறும் மிக இக்கட்டான தேர்தலாகையால் தமிழ் மக்கள் தமது தெரிவில் மிகக் கவனத்துடன் செயற்படவேண்டும்.

கடந்த தேர்தல்களில் குறிப்பாக இரண்டு ஜனாதிபதித் தேர்தலில் நடந்தவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் தலையிடாது ஒதுங்கி இருந்து கொண்டு தமிழ் மக்களை அவர்களின் இஷ்டப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிடவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகிறது.

கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களில் நடந்த தவறுகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதியை கூடக் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இழந்துவிட்டனர். இதன் காரணமாகவோ என்னவோ அவர்கள் இப்போது மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்களுடன் பேசுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டொரு நபரே இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் ஏனையவர்கள் வெறும் ஆமாம் போடுபவர்களே என்பதையும் அனைவரும் அறிவர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சுயநலமும் பதவிஆசையும் பெருமளவு ஆட்கொண்டுள்ளமையால் மக்களை வழிநடத்தும் தகுதியையும் அவர்கள் இழந்துவிட்டனர்.

அத்தலைவர்களில் அநேகர் தமது நிகழ்ச்சி நிரலின்படியே செயற்படுவதோடு தமது எதிர்காலம் பற்றிய கனவுடனும் தமது கட்சிகளின் எதிர்காலம் பற்றிய நினைவுகளுடனும் இருக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் புத்தி ஜீவிகளுக்கும், அனுபவசாலிகளுக்கும் பஞ்சமில்லை. மக்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கவும் திறமையான தலைமையை தகுதியுள்ள பலர் ஏற்கத் தயாராக உள்ளனர்.

தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டு மூன்று நபர்களைத் தவிர ஏனையோர் வெறும் ஆமாம் போடுபவர்களாகவே உள்ளனர். முக்கிய முடிவுகளை அந்த இரண்டு மூன்று பேர் மாத்திரமே எடுக்கின்றனர். உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இவர்களுடைய முடிவுகளை ஒழுங்காக பத்திரிகைகளில் எழுதுவதோடு அம்முடிவுகளை திரும்பதிரும்ப மிகைப்படுத்தி வருகின்றனர்.

இலகுவாக வேலை செய்யமுடியும் என்பதால் ஆமாம் போடுகின்றவர்களை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தகுதியானவர்களிடம் ஆலோசனை பெற்று காலம் கடத்தாது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயலவேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் தலையிடாது தமிழ் மக்களை தாமாகத் தாம் விரும்புவருக்கு வாக்களிக்கக் கூடிய வகையில் அவர்களை செயற்படவிட்டு ஒதுங்கியிருக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை கேட்பதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு போதிய நியாயமான காரணங்கள் உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுகட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியை நீக்கிவிட்டு அந்த அணியில் தம்மை இணைத்துக்கொண்டது. இதை தமது சொந்த இலாபத்துக்காகவும் ஓர் அரசியல் கட்சியாக தம்மை தக்கவைத்து கொள்வதற்குமாகவே அப்படிசெய்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக புலிகள் சார்ந்த புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவைபெறவே அவ்வாறு செய்தனர். இதன் உள்நோக்கம் பற்றி அனைவரும் அறிந்ததே. சாதாரண பொதுமக்களுக்கு இச்செயல் தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் அநேக பிரச்சனைகளை எதிர்நோக்கியவர்கள் என்றும் பலதுன்பங்களோடு வடக்கு, கிழக்கு புலிகளின் ஆதிக்கத்தில் உட்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். இன, மதபேதமின்றி அனைத்து மக்களும் பட்ட துன்பங்கள் சொல்லில் அடங்காது. அத்துடன் அவர்கள் இழந்த உயிரிழப்புக்கள், உடைமைகளின் பெறுமதிகளும் கணிக்கப்படமுடியாதவை.

அப்படியிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களை தவறாக வழிநடாத்தி சகல தேர்தல்களிலும் தம் இஷ்டப்படி வாக்களிக்க வைத்துள்ளனர். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இந்தத் துயரமான நிலை நீண்டகாலமாக நிலைத்து நிற்கிறது. மிகதுன்பகரமான விடயம் என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் புலிகளுக்கு சார்பானவர்கள் என்ற முத்திரையை குத்திவைத்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருப்பின் தாம் மௌனமாக இருந்துகொண்டு தமிழ் மக்களை தம் இஷ்டப்படி இத் தேர்தலில் செயற்பட்டு விடுதலைப் புலிகள் என்று குத்தப்பட்ட முத்திரையை அகற்ற உதவுமாறு த.தே.கூட்டமைப்பை த.வி.கூ கேட்டுக்கொள்கிறது.

காலத்துக்குக் காலம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மிகச்சாதுரியமாக தமிழ் மக்களை விடுதலைப் புலிகளின் சார்பானவர்கள் என்பதை உண்மைக்கு மாறாக சாதித்தே வந்துள்ளனர். நாம் எதிர்நோக்கும் சகல பிரச்சனைகளையும் ஒவ்வொரு தமிழ் மகனும் மிககவனமாக பரிசீலித்து வேட்பாளர்கள் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன் வைத்துள்ள விடயங்களை நன்கு ஆராய்ந்து யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற நல்ல முடிவினை எடுக்கவேண்டும்.

கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களில் விட்ட தவறை மீண்டும் விடாமல் பகிஷ்கரிக்கும் எண்ணத்தை கைவிட்டு தமிழர்கள்தான் ஜனாதிபதியைத் தெரிவுசெய்வார்கள் என்ற இறுமாப்பு எண்ணத்தையும் கைவிடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகிறது. – என்றுள்ளது.

Related Posts