Ad Widget

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவே ரணிலுக்கு பதவி வழங்கினேன்: ஜனாதிபதி

நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயே ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்று தெரிவித்தது எனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு ஆகும்.

அந்த நிலைப்பாட்டில் இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லாதபோதிலும் நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு நான் அழைப்பு விடுத்தேன்.

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லை. அத்தகைய அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கே உரித்துடையது.

யார் எவ்வகையான அறிக்கைகளை வெளியிட்டாலும் கடந்த சில வாரங்களாக என்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முடிவுகளும் நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக எடுக்கப்பட்ட முடிவுகள்.

நாடாளுமன்றத்தை கலைத்தல், ஒத்திவைத்தல், பிரதமரை நீக்குதல், புதிய பிரதமரை நியமித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எடுக்கவில்லை.

நாட்டின் உயர் பதவியில் இருக்கும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றதன் பின்னரே நான் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படும் எவ்வித எண்ணமும் எனக்கு இருக்கவில்ல”‘ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Related Posts