Ad Widget

சொந்த இடங்களில் மக்களை உடன் மீளக் குடியமர்த்துங்கள் – ஐ.நா

Chaloka-Beyani_UNஇலங்கையில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பில் இராணுவத்தின் வகிபாகம் குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பெயானி, இதுவரை தமது சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படாத மக்கள், அவர்களின் சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படுவதுடன் அவர்களுக்கு நட்டஈடும் வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் சலோகா பெயானி, தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 26வது அமர்வில் சமர்ப்பித்துள்ள உள்ளக இடம்பெயர் மக்கள் குறித்த விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த டிசெம்பர் மாதம் இலங்கை வந்திருந்த பெயானி, வடக்குப் பகுதியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளையும், மீள் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் நிகழ்கால நிலைமைகளையும் பார்வையிட்டுச் சென்றிருந்தார். அத்துடன் அவர்களுடன் உரையாடல்களை நடத்தியிருந்த பெயானி, மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

தான் நேரடியாகக் கண்டவற்றையும், இங்கு திரட்டிய தகவல்களையும் கொண்டு தாம் தயாரித்துள்ள அறிக்கையைத் தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்துள்ளார் பெயானி. அந்த அறிக்கையில், இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துதல், காணி விவகாரங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தேசிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று பரித்துரைத்துள்ளார் பெயானி.

அதுமட்டுமல்லாது, போர் முடிவடைந்துள்ள நிலைமையில் தேசிய பாதுகாப்பில் இராணுவத்தின் வகிபாகம் தொடர்பில் மீள்மதிப்பீடு செய்யப்படவேண்டும். குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைவாக அதனைச் செய்யலாம். வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள சில பகுதிகளிலிருந்து இராணுவத்தை மீளப்பெறுவதற்கான திட்டத்தின் வெளிப்படையான தகவல்களை இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் இடப்பெயர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்டஈடும் வழங்கப்பட வேண்டும்.

இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்ற செயற்பாடுகளின்போது அவர்கள் தாக்கப்படுதல் சித்திரவதைக்கு உட்படுதல் அச்சுறுத்தப்படல் என்பன இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும். அவர்களின் சுதந்திரமான நடமாட்டம் உறுதிபடுத்தப்படவேண்டும். காணாமற் போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆணைக் குழுவானது சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதிபடுத்த வேண்டும். காணாமற் போனோரின் உறவினர்களுடன்

இணைந்து செயற்பட்டு பரிந்துரைகளை வெளிப்படுத்தவேண்டும்.இடம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதிபடுத்த வேண்டும். சிவிலியன்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் இருக்கின்றமை குறித்து ஆராயப்படவேண்டும் என்றும் அவர் பரித்துரைகளைச் செய்துள்ளார்.

Related Posts