Ad Widget

செந்தூரனின் கடிதத்தினை பிரதி எடுத்த இளைஞர் கைது!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட செந்தூரனினால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதத்தின் பிரதிகளை அச்சிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பாலேந்திரன் பிரசாத் என்ற இளைஞரே நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த (26) யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயிலும் மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரன் என் தமிழ் ஈழம் என்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

அந்த மாணவனின் தற்கொலை விடயம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த விசாரணையின் முதற்கட்டமாக செந்தூரன் தற்கொலை செய்து சில மணி நேரங்களின் பின்னர் அவரது புத்தக பையில் இருந்த அப்பியாச கொப்பியில் இருந்த குறித்த கடிதத்தினை எடுத்து அந்த இளைஞர் அருகில் இருந்த போட்டோ பிரதி அச்சிடும் கடையில் பிரதிகள் எடுத்து அங்கிருந்தவருக்கு வழங்கியுள்ளார். இந்த சந்தேகத்தின் பேரில் அவ்விளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

விசாரணையின் பின்னர் குறித்த இளைஞரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts