Ad Widget

சுவீகரிப்பை நிறுத்தி காணிகளை மக்களிடம் கையளியுங்கள்! – சஜீவன்

அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளை அரசியல் தேவைக்காக பார்கின்றார்களே தவிர, மக்களின் நலன் சார்ந்து பார்க்கவில்லை என, வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்கத் தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் நேற்று தெரிவித்தார்.

sajeevan

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமது பங்களிப்பினை செலுத்தி வந்தாலும் சிலர் அரசியல் நோக்கத்திற்காக செயற்படுகின்றார்கள்.

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களின் காணிகள் 6381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டு விட்டன.

கொழும்பில் இருந்து வந்த நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் கடந்த 2011ஆம் ஆண்டு காணிகளை அளந்துள்ளனர்.

இவ்வளவு காலமும் இதனை மறைத்து வைத்திருந்த இலங்கை அரசாங்கமும் இராணுவத்தினரும், 2013 ஆம் ஆண்டு மே மாதம் 06ம் திகதி அளக்கும் படி தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதற்கு முன்னரே அளந்து விட்டார்கள். காணிகள் அளக்கப்பட்ட வரை படத்தினை காண்பிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

திட்டமிட்ட வகையில், இலங்கை அரசாங்கமும், இராணுவத்தினரும் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை சிதைப்பதற்கான வேலைகளை செய்து வருகின்றார்கள்.

இந்த காணி சுவீகரிப்பிற்கு மக்களின் எந்த வித அனுமதியும் இராணுவத்தினராலோ அல்லது அரசாங்கத்தினாலோ பெறவில்லை.

அந்தவகையில், வலி. வடக்கு மீள்குடியேற்ற குழு மற்றும் மக்களும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும், தமது நிலங்கள் தமக்கு சொந்தமென வாதாடுவதற்கும் போராடுவதற்கும் தயாராக இருக்கின்றார்கள்.

வலி. வடக்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கையினை நிறுத்தி மக்களிடம் கையளிக்குமாறு அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts