Ad Widget

சுவாதியின் தோழர்களின் பரபரப்பு வாக்குமூலம்

பொறியலாளர் சுவாதியை கொன்ற கொலைகாரன் பற்றி சுவாதியின் தோழி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். சுவாதியை கொலைகாரன் 2 நாட்கள் பின்தொடர்ந்து வந்ததை நேரில் பார்த்ததாக அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. சுவாதி கொல்லப்பட்ட சம்பவம் பற்றி தினம்தினம் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சுவாதியை கொன்ற கொலைகாரனின் கேமரா உருவ படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. கொலைகாரன் பற்றி தகவல் தெரிந்தவர்கள் கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர்கள் முத்துவேல் பாண்டி, தேவராஜ், கலிதீர்த்தான் ஆகியோரது செல்போன்களில் பேசி தெரிவிக்கலாம் என்று காவல்துறை கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட சுவாதியின் தந்தை, அக்காள், நெருங்கிய தோழி மற்றும் சுவாதியின் நண்பர் ஆகியோரிடம் கொலைகாரன் பற்றி தனிப்படை துருவித்துருவி விசாரித்து வருகிறார்கள்.

வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் மர்மநபர்தான் சுவாதியை கொன்ற படுபாதக கொலையாளி என்று நுங்கம்பாக்கம் புகையிரத நிலைய உணவக ஊழியரும், சுவாதியின் நெருங்கிய தோழியும் அடையாளம் காட்டியுள்ளனர். இதனால் புகைப்படத்தில் இருக்கும் மர்மநபர்தான் சுவாதியை கொன்ற கொலைகாரன் என்பது உறுதிபட தெரியவந்துள்ளது.

அந்த கொலைகாரன் பற்றி சுவாதியின் தோழி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் சுவாதி வேலைபார்க்கும் கணினி நிறுவனத்தில்தான் வேலை பார்க்கிறேன். சுவாதியை கொன்ற கொலைகாரனை நான் 2 நாட்கள் நேரில் பார்த்துள்ளேன். கடந்த 10-ந் திகதியன்றும், 11-ந்த திகதியன்றும் நானும், சுவாதியோடு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தேன்.

அப்போது அந்த மர்மநபர் சுவாதியை பின்தொடர்ந்து வருவதை நான் பார்த்தேன். “அந்த மர்மநபர் என்னை பின்தொடர்ந்து வருகிறான். ஏன் என்று தெரியவில்லை. அவன் என்னிடம் என்னை உனக்கு தெரியவில்லையா? என்று கேட்கிறான். ஆனால் உண்மையிலேயே அவனை எனக்கு யார் என்று தெரியவில்லை” என்று சுவாதி என்னிடம் கூறினாள்.

இந்த விஷயத்தை லேசாக விடக்கூடாது அவனை கண்டிக்க வேண்டும் என்று நான் சுவாதியிடம் எச்சரித்தேன். அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சுவாதி என்னிடம் கூறினாள். ஆனால் அந்த படுபாவி சுவாதியை இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த பாவியை கைது செய்து காவல்துறை கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு சுவாதியின் தோழி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

சுவாதியின் நண்பரிடம் நடத்திய விசாரணையில் அவரும் சில திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

நானும், சுவாதியும் ஒரே பொறியல் கல்லூரியில் படித்தோம். நல்ல நண்பர்களாக பழகிவந்தோம். திருவல்லிக்கேணியில் உள்ள எனது வீட்டிற்கு கூட சுவாதி வந்திருக்கிறாள். இரக்க சிந்தனையுள்ள சுவாதி நல்ல மனம் படைத்தவள். யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டாள்.

கடந்த 18-ந் திகதியன்று சுவாதி, என்னிடம் செல்போனில் பேசினாள். அதுதான் அவள் கடைசியாக என்னிடம் பேசிய பேச்சு. மர்மநபர் ஒருவன் என்னை பின் தொடர்ந்து வருகிறான். கடந்த 10-ந்திகதி யன்றும், 11-ந் திகதியன்றும் அவன் என்னை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்தான் அவனை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சுவாதி கூறினாள்.

அவனை யார் என்று அடையாளம் காட்டு நான் அவனை கண்டிக்கிறேன் என்று சுவாதியிடம் கூறினேன். அவன் அவ்வளவு பெரிய ஆளாக தெரியவில்லை. அவனை ஒன்றும் செய்யவேண்டாம். இந்த பிரச்சினையை விட்டுவிடு என்று சுவாதி அப்போது என்னிடம் கூறிவிட்டாள்.

நானும் அந்த பிரச்சினையை மறந்துவிட்டேன். சுவாதி கொலை செய்யப்படுவாள் என்று நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. சுவாதியை பின்தொடர்ந்த மர்மநபர் இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்வான் என்றும் நினைக்கவில்லை. அந்த படுபாவி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு சுவாதியின் நண்பர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனிப்படை கொலையாளியை கண்டுபிடித்து கைதுசெய்யும் முயற்சியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேற்றும் இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

Related Posts