Ad Widget

சுய மரியாதையோடு வாழவே விரும்புகின்றோம்: மன்னார் ஆயர்

நாம் ஈழத்தை கேட்கவில்லை. மாறாக சுயமரியாதையுடன் வாழ்வதையே விரும்புகின்றோம். என மன்னார் ஆயர் ராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.

mannar-ayar-my3

பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மன்னார் ஆயரை செவ்வாய்க்கிழமை (30) சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த சந்திப்பு குறித்து ஆயர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,

‘இந்த நாடு பல இன, சமய, மொழி கலாச்சாரங்களை கொண்ட நாடு. ஆனால் ஒரே மக்கள் ஒரே நாடு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்ற ஆட்சியே இன்று இங்கு இருக்கின்றது. துன்பங்களை தாங்கிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் கருத்துக்கள் இன்றைய ஆட்சியாளர்களின் சிந்தனைகளுக்கு வருவதில்லை.

மாறாக தமிழ் மக்களுக்கான எதிர்ப்பு உணர்வுகளையே அவர்களிடமிருந்து நாங்கள் சந்தித்துள்ளோம். இவ்வாறான இடர்களை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய எவரும் முன்வரவில்லை. தமிழ் மக்களுக்கு உதவி செய்தால் சிங்கள மக்கள் தங்களுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பார்கள் எனும் ஒரு மாயையில் ஆட்சியாளர்கள் சிக்குண்டு இருக்கின்றார்கள்.

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரேநாட்டு மக்கள். அனைவரும் சமரசமாக வாழ வேண்டியவர்கள். அப்படித்தான் நாங்கள் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் தமிழ் மக்களைப் பற்றிய தவறான எண்ணத்தையும் சிந்தனையையும் தோற்றுவிக்கும் முகமாகவே சிங்கள மக்களிடம் அரசியல்வாதிகள் கருத்துக்களைக் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தமிழ் மக்கள் அவ்வாறு சிந்திக்கவில்லை. ஏனென்றால் ஒரு துன்பம் நேருமானால் அது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் நேர்ந்ததாகத் தான் நாம் உணர்கிறோம். ஆகவே இந்த நாட்டிலுள்ள அரசால் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும். தமிழ் ஈழத்தை தவிர தமிழ் மக்களுக்கு எல்லாம் தருவேன் என இந்த அரசியல்வாதிகள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் எங்களுக்கு ஒன்றுமே தரவில்லை.

பல இனம், மொழி, சமயம் கொண்ட இந்த நாட்டில் தமிழ் மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் உரிமைகளை அகிம்சை வழியாகவும், அரசியல் ரீதியாகவும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் இவைகள் எல்லாமே ஆயுதங்கள் கொண்டு நசுக்கப்பட்டனவே தவிர வேறு எந்த பயனும் கிடைக்கவில்லை. இதனால் தான் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து நாட்டை நல்வழியில் கொண்டு செல்வதற்கு அரசியல் தீர்வு மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் முனைந்தோம்.

இறைவன் எமக்கு தந்த பெருங்கொடை இந்த நாடு. இயற்கையிலே ஓர் அழகான நாடாக இருப்பது. ஆனால் மனிதர்களோ இவற்றை அழிப்பதிலேதான் முனைந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆகவே தான் இந்நிலை மாற்றம் பெற்று ஒரு புதிய நாடாக ஓர் அழகான இலங்கையாக மாறவேண்டியிருக்கின்றது. இதைத்தான் நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

தமிழ் மக்களுக்கு நீண்டகாலப் பிரச்சினைகள் இருக்கின்றன. இதைப்பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை என்று அரசில்வாதிகள் இருக்க முடியாது. அதைக் கேட்பவர்களையும் அவர்கள் தண்டிக்க முடியாது.

இவற்றை கேட்பவர்கள் தமிழ் பகுதியில்தான் இருக்கின்றார்கள் எனவும் சொல்ல முடியாது. தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் வடமாகாண சபையுடனும் பேச்சு நடத்தும் போதுதான் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்கொண்டு வருவார்கள்.

அப்பொழுது எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு தீர்வை பெறமுடியும். இது செய்யப்படுமானால் அநீதிகளோ மக்கள் புறக்கணிப்போ இந்த நாட்டில் ஏற்படாது. மேலும் இந்த நாட்டில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள், விதவைகள், உடலில் காயத்துடனும் குண்டுகளுடனும் இன்னும் மன அழுத்தத்துடன் இருக்கும் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

இது ஏன் கவனத்துக்கு எடுக்கப்படவில்லையென்றால் தமிழர்களின் வாக்குகள் தங்களுக்கு தேவைப்படாது என்ற காரணமே. தற்பொழுது எதிரணியில் போட்டியிடும் அமைப்பு, அதன் வேட்பாளர் ஒரு பரந்த மனப்பாங்குடன் மட்டுமல்ல அவற்றை நல்முறையில் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டபோது அவர்களும் அதே மனப்பாங்குடன் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

அத்துடன் இவர்களின் விஞ்ஞாபனத்திலும் செயற்பாட்டிலும் நல்லெண்ணங்கள் இருப்பதையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே எமது தமிழ்மக்கள் இவர்களுக்குத்தான் வாக்களிப்பர். இவர்களின் நல்லெண்ணங்கள், செயற்பாடுகள் நல்ல முறையில் நடைபெற வாழ்த்தியதுடன் இந்த நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் திகழ்வதற்கு வாழ்த்தியதாக’ மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.

Related Posts