Ad Widget

‘சுதந்திர பயணம்’ வடமாகாண இளைஞர்கள் மாநாட்டில் ஏகமானதாக கைக்கொள்ளப்பட்ட பிரகடனம்

2014 டிசம்பர் 10ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ‘சுதந்திர பயணம்’ வடமாகாண இளைஞர்கள் மாநாட்டில் ஏகமானதாக கைக்கொள்ளப்பட்ட பிரகடனம்.

suthanthera-elanger-1

suthanthera-elanger-2

முன்னுரை

இலங்கை 1948இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்ததோடு இனமுரண்பாடு தோற்றம் பெற்றது எனலாம். இதன் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த தலைவர்களின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் மற்றும் அவர்களின் கொள்கைகள் காரணமாக தொடர்ந்த இன மோதலானது நாளுக்கு நாள் பல்வேறு பரிமாணங்களைக்கொண்டு வளர்ச்சியுற்றது. இது மொழி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் காணிப்பகிர்வு என்பனவற்றை உள்ளடக்கிய முரண்பாடுகளை கொண்டிருந்தது. காலபோக்கில் பாரிய கொரூர யுத்தமாக உருவெடுத்து பெரியளவிலான உயிர்சேதங்களையும், ஈடுசெய்யமுடியாதளவான சொத்து அழிவுகளையும் அங்கவீனமுற்றவர்களையும் மற்றும் மனித விழுமிய சீரழிவுகளையும் ஏற்படுத்தியது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து இன இளைஞர்களே ஆவர். இந்த கோர யுத்தம் கடந்த 2009ம் ஆண்டின் நடுப்பகுதியோடு முடிவுக்கு வந்தபோதும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு முன்வைக்கப்படவில்லை. இளைஞர்கள் யுத்த நிலைமைகளிலிருந்து விடுப்பட்டுள்ளபோதிலும் அவர்களுக்கான பல்வேறு பிரச்சினைகள் தொடரவே செய்கிறது.

குறிப்பாக வடக்கின் இளைஞர்கள் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்வதோடு இதுவே இவர்களின் பாரிய சவால்களாகவும் மாறிவறுகிறது. வடக்கின் இளைஞர்கள் தமது பிரச்சினைகள், தேவைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் தமது அபிலாசைகள் போன்றனவற்றை வெளிப்படுத்தும் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் தகவல் பெறும் சுதந்திரம் என்பனவற்றையேனும் பயன்படுத்தமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையை வடக்கின் பலதரப்பட்ட பிரதேசங்களில் நாம் கடந்த பயணங்களில் நன்கு உணர்கிறோம். இவர்களின் தேவைகளையும் அதன் அவசியத்தையும் அவசரத்தையும் புரிந்துக்கொண்டுள்ள நாம் இவர்களுக்கான ஓர் களமாகவே அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பை கடந்த 2013ம் ஆண்டின் ஓக்டோபர் மாதத்தில் ஆரம்பித்தோம்.

நாம் கடந்த ஒரு வருட காலத்தில் வடக்கில் முன்னெடுத்த நடவடிக்கைகளில் இளைஞர்கள் தொடர்பில் நிறைய அனுபவங்களை பெற்றுக்கொண்டோம். இவர்களுடனான பணிகளின்போது நிறைய சவால்களை நாமும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. ஆயினும் எமது பணிகளில் நம்பிக்கையோடு அனேகமான இளைஞர்கள் கைகோர்த்துக்கொண்டமையால் நாம் இப் பணியை நம்பிக்கையோடு தொடர்கிறோம். இளைஞர்களுடன் மேற்கொண்ட பல்வேறான கலந்துரையாடல்கள், செயலமர்வுகள் மற்றும் ஆய்வுகளின்போது இவர்கள் வெளிப்படுத்திய ஆதங்கம் மற்றும் வேதனைகளுக்கு தீர்வுத்தேடவேண்டிய பொறுப்பை அவர்களே ஏற்றதன் பிரதிபலிப்பே ‘சுதந்திர பயணம்’ இளைஞர் மாநாடும் இவ் சுதந்திர பயண பிரகடனமும் ஆகும். தமது பிரச்சினைகளை வன்முறையற்ற ரீதியில் ஓர் கௌரவமான அனுகுமுறையில் அனுகவே இவர்கள் முனைகின்றனர். இந்த பிரகடனத்தில் இவர்கள் எதிர்பார்ப்பதை சம்மந்தபட்டவர்கள் நிறைவேற்ற முன்வரவேண்டும் எனவும் இதனூடாக இந்த சுதந்திர பயணத்தில் கைகோர்த்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நிறைவேற்று சபையினர் 10.12.2014
அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு
இல: 28, கைலாசபிள்ளையார் வீதி,
நல்லூர்
யாழ்ப்பாணம்

பகுதி – 01

01. அறிமுகம்

இலங்கை ஒரு பல்லின அரசியற் சமுதாயமாகும். தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், மலாயர், பறங்கியர் என பல்லினத்துவம்கொண்ட ஒரு நாடாகும். இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இவ் இனத்தவர்கள் மிகவும் பரஸ்பரம் பகிர்ந்துக்கொண்டு மிக நெருங்கி வாழ்ந்து வந்திருக்கின்றனர். வேறு சில வளர்முக நாடுகளைப்போன்று இலங்கையும் 1948இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இனமுரண்பாட்டின் கோர விளைவுகளை அனுபவித்து வருகிறது.

அவ்வப் போதைய ஆட்சியாளர்களதும் ஏனைய அரசியல்வாதிகளதும் தூரநோக்கற்ற செயற்பாடுகளும், ஆட்சி அதிகாரங்களை தக்கவைப்பதற்கான பிரித்தாலும் தந்திரோபாயங்களை கையாண்டமையாலும் மற்றும் ஏனைய அரசியல் சுயலாப நோக்கங்களாலும் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்குமிடையிலான இன முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டது. இது சமூக ரீதியாகவும் அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையிலும் நாட்டினை பெரும் பாதாளத்தில் தள்ளியதோடு இலங்கை தேசியத்தின் உளவியலிலும் பாரிய வடுக்களை ஏற்படுத்தியது. படிப்படியாக வளர்ச்சியுற்ற இவ் இனமுரண்பாடு ஆட்சியாளர்களின் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைகள் காரணமாகவும் மனித உரிமைகள் மீறல்கள் காரணமாகவும் ஓர் கொரூர உள்நாட்டு யுத்தத்தை தோற்றுவித்தது. இது வடக்கு கிழக்கில் ஆழ ஊடுருவியதுடன் நாட்டின் சகல பிரதேசங்களிலும் தாக்கத்தை செலுத்தியது. யுத்தம் காரணமாக பாரிய அளவிலான மீளவும் ஈடுசெய்ய முடியாத உயிர்சேதங்களும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டது. இது மட்டுமல்லாது இதனால் தொலைக்கப்பட்ட மானுட விழுமியங்களும், மனித கௌரவமும,; சமூக நீதியும் இன்னும் பெறப்படமுடியாமலே உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு அதிகமாக இனமுரண்பாட்டால் தோற்றுவிக்கப்பட்டு நடைப்பெற்று வந்த இவ் யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு நடுப்பகுதியோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. கொரூர யுத்தத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளபோதிலும் யுத்தம் நிறைவுற்று ஜந்து ஆண்டுகள் கடந்தும் இனமுரண்பாட்டிற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இனமுரண்பாட்டின் தோற்றுவாய், இதனால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் இதற்கான காரணிகள் இதேப்போல் தீர்வு முயற்சிகளின் தோல்விகளுக்கான காரணிகள் ஆழமாக ஆராயப்பட்டு அதற்கான சரியான தீர்வுகளை இன்னும் முன்வைக்காமை மிகவும் வேதனைக்குறியதே.

02. அன்பிற்கும் நட்பிற்குமான வலையமைப்பு பற்றிய ஓர் அறிமுகம்

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பானது சிவில் சமூக இளைஞர்கள் தமக்கான கொள்கைள் மற்றும் திட்டமிடல் போன்றனவற்றில் விவாதங்களை மேற்கொள்ளவும் அவற்றில் பங்கேற்கவும் மற்றும் ஒத்துழைக்கவும் தேவையான இயலளவை மேம்படுத்தி சக்கிமயப்படுத்தலில் கவனம் செலுத்துகிறது. சிறார்கள் மற்றும் இளைஞர்களது பாதுகாப்புக்கு குரல்கொடுக்கும் தூதனாக

தூரநோக்கு சிந்தனை, ஆக்கபூர்வமான மனப்பாங்கு மற்றும் நிபுணத்துவம் என்பவற்றை ஊக்குவித்து சக்திமயப்படுத்துகிறது.

கடந்த காலங்களில் பல்வேறான சவால்களை எதிர்கொண்டு தாம் ஆற்றிய பணிகளின் அனுபவத்திலும், கருத்து பறிமாற்றங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் திறந்தமட்ட உரையாடல்கள் போன்றனவற்றின் ஊடாக வடக்கின் இளைஞர்களாகிய தாம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் நியாயமானதும் நீதியானதுமான அனுகுமுறையில் தீர்த்துக்கொள்ள தம்மாலான முயற்சிகளில் ஈடுபடுகிறது. இதன் அடிப்படையிலேயே வடக்கின் இளைஞர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகத்தினர் தற்போதைய நிலையில் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளுக்கான தீர்வினை வேண்டி சுதந்திர பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.

இதன் ஓர் அங்கமாகவே 2014 டிசம்பர் 10ம் திகதி புதன்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ‘சுதந்திர பயணம்’ வடமாகாண இளைஞர்கள் மாநாட்டில் ஏகமானதாக கைக்கொள்ளப்;பட்டு இப் பிரகடனம் சம்மந்தப்பட்ட சகலரதும் ஆழமான கரிசனைக்கு முன்வைக்கப்படுகிறது.

பகுதி – 02

‘சுதந்திர பயண’ வடமாகாண இளைஞர்கள் மாநாட்டில் பிரகடனப்படுத்தபடுவதாவது

01. மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும்

அ. மோதல்கள் காரணமாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் பெரிதும் மீறப்பட்டன. மோதல்கள் நிறைவுற்றுள்ள போதிலும் இந் நிலை தொடர்கிறது. பேச்சு சுதந்திரம், விரும்பிய இடத்திற்கு நடமாடும் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் போன்றன தொடர்ச்சியாக மீறப்படுதல் நிறுத்தப்பட்டு இலங்கையின் அரசியல் யாப்பின் மனித அடிப்படை உரிமைகள் அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள இவ் உரிமைகள் உறுதிசெய்யபடவேண்டும் என இளைஞர்கள் பிரகடனப்படுத்துகின்றனர்.

ஆ. சகல மக்களதும் மனித உரிமைகளை செயலாக்கத்துடன் மேம்படுத்தி பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மோதலினால் பாதிப்புற்ற பெண்கள் சிறுவர்கள், மற்றும் வலதுக்குறைந்தோரின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் இவர்களுக்கான மனித கௌரவம் உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.

இ. பெரும்பாலான இளம் பெண்கள் யுத்த காரணிகளால் திருமணம்செய்து தமது கணவன்மாரை இழந்துள்ளனர். இவர்களின் வாழ்வாதார மற்றும் அடிப்படை தேவைகளில் மேலும் அக்கறைசெலுத்தல் அவசியமென வலியுறுத்துகிறோம்.

02. இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு

அ. மோதலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்ற அடிப்படையில் மீள கட்டியெழுப்புவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளில் உட்கட்டுமான அபிவிருத்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வீதி அபிவிருத்தி மற்றும் கட்டிடங்களுக்கே முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளது. போதிய அளவு பாதிக்கப்ட்டவர்களின் அன்றாட அடிப்படை தேவைகளான வாழ்வாதார தேவைகளுக்கான சமூக பொருளாதாரம் பற்றி போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இது பூரண மதிப்பீடு செய்யப்பட்டு தேவையான பொருளாதார அபிவிருத்தி பொறிமுறைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என இளைஞர்களாகிய நாம் வெளிப்படுத்துகின்றோம். இது பாதிக்கப்பட்ட இளைஞர்களதும் மக்களதும் வறுமையை மற்றும்; அடிப்படை பொருளாதார பிரச்சினைகளை குறைப்பதை நோக்காககொண்ட பொருளாதார கொள்கையாக அமையவேண்டுமென இம் மாநாட்டில்; வலியுறுத்துகின்றோம்

ஆ. யுத்தத்தால் பாதிப்புற்றுள்ள இளைஞர்கள் தமது அன்றாட தேவைகளையே பூர்த்திசெய்துக்கொள்ளமுடியாது தினமும் கூலித்தொழில்களை எதிர்பார்ப்பவர்களாய் அல்லது தங்கிவாழ்வோராய் இருந்துவருகின்றனர். இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் தமது அன்றாட அடிப்படை உணவு தேவைகளைக் கூட பெற்றுக்கொள்முடியாத நிலை காணப்படுகிறது. நீடித்த யுத்தம் காரணமாக வடக்கில் பாதிக்கப்பற்ற இளைஞர்களதும் அவர்களை சார்ந்தவர்களதும் நிலைமை தொடர்பில் விசேட அக்கறை செலுத்தி இவர்களின் அன்றாட மற்றும் நிரந்தர பிரச்சினைகள் பற்றி ஆழமாக ஆராய்ந்து அவர்களின் அன்றாடஅடிப்படை வாழ்வாதார தேவைகளும், இதற்கான நிரந்தர தீர்வுகளும் கண்டறியப்பட்டு இதனை நடைமுறைப்படுத்தவேண்டும்.

இ. வடக்கின் அனேகமான இளைஞர்கள் தொழில்வாய்பற்றவர்களாக காணப்படுகின்றனா.
இளைஞர்களுக்குரிய பொருளாதார ரீதியான தொழில்வாய்ப்பு சந்தர்ப்பங்களில் பாதுகாப்புத்துறை
சார்ந்தோரின் தலையீடு யுத்தத்தின் பின்னர் அதிகரித்துவருகிறது. குறிப்பாக வடக்கின் பிரதான
வருமான மூலங்களாக காணப்படுவது விவசாயத்துறை, கால்நடை மற்றும் மீன்பிடி துறைகளாகும்.
இத்துறைகளில் தற்போது அதிக எண்ணிக்கையான பாதுகாப்பு படையினர் ஈடுபடுகின்றனர். இது
தமக்கான தொழில்வாய்ப்புகளை பாதிப்பதோடு, இவ்வாறு ஈடுபடும் பாதுகாப்பு படையினர் தமது
உற்பத்திகளை மிக குறைந்த விலையில் விற்பனை செய்வதனால்; இளைஞர்களின்
உற்பத்திகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. தமது உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பு
பாதிக்கப்படுகிறது. எனவே இது தொடர்பில் உடனடி அவதானம் செலுத்தப்பட்டு தமக்கான
தொழில்த்துறைகளில் இராணுவத்தின் தலையீடுகள் மற்றும் தொடர்புகள் தொடர்பில் உரிய
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இ. அரச தொழில்வாய்ப்பு நியமனங்கள் அனேகமான சந்தர்ப்பங்களில் அரசியல் நியமனங்களாக
மாற்றபடும் நிலை மாறி அரச நியமனங்களாகவே வழங்கப்பட இருக்கும் அரசியல் தலையீடுகள்
நீக்கப்படவேண்டும். மேலும் உரிய தகுதிகள் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவேண்டும்

03. காணிப் பிரச்சினைகள்

அ. மோதலின் பின் இளைஞர்கள் தமது இயல்பு வாழ்வினைகொண்டு நடத்துவதில் காணி தொடர்பிலான பிரச்சினைகள் ஓர் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. வட மாகாணத்தில் சட்ட விரோதமாக காணிகளை அபகரித்தல், சட்ட விரோத காணி மாற்றங்கள் மற்றும் அவற்றை நிறுவனமயமாக்கல் என்பனவும் உரியவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அல்லது சரியான பொறிமுறைகள் பேனப்படாமையாலும் நாட்டின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய தமக்கே உரிய காணிகளை உரித்தாக்கிகொள்ளவும் தாம் விரும்பிய இடத்தில் வசிப்பதற்கும் உள்ள உரிமைகளை அனுபவிக்கமுடியாதவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை இது பெரிதும் பாதிக்கிறது. எனவே பின்வருமாறு பிரகடனப்படுத்துகின்றோம் சட்ட விரோதமாக காணிகளை அபகரித்தல், சட்ட விரோத காணி மாற்றங்கள் மற்றும் அவற்றை நிறுவனமயமாக்கல் என்பன தடுத்து நிறுத்தப்படவேண்டும். உரியவர்களின் காணிகள் மீள பெற்றுகொடுக்கப்படல் வேண்டும்.

ஆ. காணி தொடர்பில் பூரணமாக ஆராய்ந்து சரியான பொறிமுறைகளின் ஊடாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவேண்டும். இது சரியான வகையில் முன்னெடுக்கப்படுகிறதா என்பதனை ஓர் சரியான வழிமுறையில் கண்காணிக்கவேண்டும்.

04. மீள்குடியேற்றத்தின் பின்னரான வீடமைப்பு திட்டம்

அ. யுத்தம் நிறைவுற்று பல்வேறான இடம்பெயர்வுகளை சந்தித்து மீள குடியேற்றப்பட்ட மக்களின் வசிப்பிட உரிமைகளை உறுதிப்படுத்தும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து இதில் இடம்பெற்றுள்ள ஊழல்கள், நீதிக்கு புறம்பான செயற்பாடுகள் தொடர்பில் உண்மை நிலை வெளிக்கொணரப்படவேண்டும்.

ஆ. பாதிக்கப்பட்டவர்களின் நீதியை கருத்தில்கொண்டு உரியவர்களுக்கான வசிப்பிட உரிமை உறுதிப்படுத்தப்படல்வேண்டும்.

இ. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை வீடுகள் இன்றி காணப்படுபவர்களுக்கான வீடுகளை
பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

05. காணாமல்போனோர் மற்றும் ஆட்கடத்தல்

அ. யுத்தம் நிலவிய காலங்களிலும் அதன் தொடர்ச்சியாகவும் காணாமல்போதல் ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளது. இதனால் பெரிதும் பாதிப்புற்றுள்ளவர்களில் குறிப்பாக இளம் பெண்களும் பிள்ளைகளும் அடங்குகின்றனர். இவர்கள் காணாமல் போனவர்கள் பற்றிய எந்த தகவல்களும் பெறமுடியாதவர்களாகவும், தமது அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதவர்களாகவும் மிக நலிவுற்ற நிலையில் காணப்படுகின்றனர். மேலும் இவர்களுக்கான பாதுகாப்பும் உறுதிசெய்யமுடியாத ஒன்றாகவே உள்ளது. எனவே காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் நிலைமை ஆராயப்பட்டு உண்மை
நிலை வெளிக்கொணரப்படவேண்டும். இதற்கு காரணமாணவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படல்வேண்டும். இதேவேளை பாதிக்கப்பற்றுள்ள குடும்பங்களது நிரந்தர பாதுகாப்பு மற்றும் அடிப்படை வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்த தேவையான விசேட வழிமுறைகள் அமுல்ப்படுத்தப்படவேண்டும்

ஆ. காணாமல் போனவர்கள் அல்லது தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தகவல்களை அறியும் உரிமை குறிப்பிட்டவர்களின் குடும்ப உறவுகளின் உரிமையாகும், ஆயினும் இவ்வாறானவர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களும் தகவல் அறியும் உரிமை மீறப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. எனவே இவர்கள் மீதான இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதோடு இவர்களுக்குரிய பாதுகாப்பும் உரிமையும்
உறுதிசெய்யப்படவேண்டும்.

இ. தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது கைதுசெய்யப்பட்டு அரசியல் கைதிகளாக சிறைவைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் தொடர்பில் சட்டத்தின்முன் விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

06. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான அவதானம் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள மற்றும் ஆயுதம் தாங்கிய மோதலினால் அங்கவீனமுற்று அல்லது மனோதத்துவ ரீதியாக பாதிக்கப்பட்ட முன்னைய இளைஞர்கள் மற்றும் ஏனையவர்கள் தாம் சுதந்திரமாக வாழ்வதற்கான நிலை உறுதிப்படுத்தப்படவேண்டும். மேலும் இவர்கள் சமூகத்தில் சமமானவர்களாக மதிக்கப்படவும், இவர்களின் வாழ்வாதார தேவைகள் நிறைவேற்றபடவும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

07. இராணுவ தலையீடுகள்

8 சுதந்திர பயண பிரகடனம் – 2014

மோதலினால் பாதிப்புற்ற எமது பிராந்தியத்தில் அதிகமான இராணுவம் காணப்படுதலும் இவர்களின் தலையீடுகளும் இளைஞர்களதும் சிவில் சமூகத்தினதும் அன்றாட நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கிறது. எமது பிராந்தியத்தில் வாழுகின்ற மக்கள் சனத்தொகையின் அடிப்படையில் இராணுவம் குறைக்கப்பட்டு பாதுகாப்பு தேவைகளுக்கு தேவையான அளவு மாத்திரம் இராணுவம் நிறுத்தப்பட்டு இளைஞர்களும், ஏனையவர்களும் அச்சுறுத்தல், பயம் மற்றும் பீதியற்று சுதந்திரமாக தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்ககூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும் என வெளிப்படுத்துகின்றனர்.

08. ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்குமான சுதந்திரம்

அ. கருத்து சுதந்திரத்திற்கும் பேச்சு சுதந்திரத்திற்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ் உரிமையானது தலையீடின்றிக் கருத்துக்களை கொண்டிருப்பதற்கும், எவ்வழிவகையிலும், எல்லைகளை பொருட்படுத்தாமலும் தகவல்களையும் கருத்துக்களையும் நாடுவதற்கும் பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தை உள்ளடக்குகிறது என்பதை இளைஞர்கள் வலியுறுத்துவதோடு இந்த சுதந்திரத்தை சகலரும் அனுபவிப்பதை உறுதிசெய்து இதனை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வேண்டுமென பிரகடனப்படுத்துகின்றோம்

ஆ. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் மற்றும் ஊடக அமைப்புகள் மீதான தாக்குதல்கள் போன்ற சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் தொடராதபடியும், பொது மக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் நடவடிகைகள் எடுக்கப்படவேண்டும்.

இ. ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சுதந்திரமாக
தமது பணிகளை முன்னெடுப்பதற்கான நிலைமையை உறுதிப்படுத்தவேண்டும்.

09. அரசியல் உரிமைகளை உறுதிசெய்தல்.

அ. இலங்கை ஓர் சனநாயக சோசலிச குடியரசு நாடாகும். அரசியல் உரிமைகளில் பிரதானமானது வாக்குரிமையாகும். இந் நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் இளைஞர்கள் வாக்குரிமை பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் உரித்துடையவர்கள். எனவே வாக்குரிமைக்கான சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதிசெய்யபடவேண்டும்

ஆ. இவ் வாக்குரிமைக்குள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகள் நீக்கப்படுவதோடு நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் எதிர்காலங்களில் நடத்தப்படவேண்டும் என இளைஞர்கள் கேட்டுக்கொள்கினறோம்.

10. இனங்களுக்கிடையே பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்பல்

அ. முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் நிறைவுற்று ஜந்து வருடங்களை கடக்கிறது. கடந்த கால இன முரண்பாட்டு பின்னனிகளால் இனங்களுக்கிடையேயான பரஸ்பர உறவில் பாரிய விரிசல்கள் ஏற்பட்ட அனுபங்கள் எமக்குண்டு. இன முரண்பாட்டின் தொடர்ச்சியாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக அதன் கொரூரமான விளைவுகளை நாட்டின் அனைத்து இனங்களையும் சேர்ந்த இளைஞர்களே பெரிதும் முகங்கொடுத்தனர். எனவே எதிர்வரும் காலங்களில் இனங்களுக்கிடையே பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்புவதற்கான பொருத்தமான கருவிகள் பயன்படுத்தப்படவேண்டும் எனவும் இதற்கான தடைகள் நீக்கப்படவேண்டும் எனவும் இளைஞர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஆ. மேலும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பிரிவினையையும் பேதங்களையும் உருவாக்கி இனங்களுக்கிடையேயான பரஸ்பர உறவினை சீர்குலைப்பதிலும், தமது வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதிலும் பிரதான இடம் வகிக்கும் ஓமந்தை சோதனை சாவடியை நீக்கி வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் சுமூக நிலையை உருவாக்கவும் பரஸ்பர உறவினை கட்டியெழுப்பவும் வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

11. வட மாகாண சபைக்கான அதிகாரங்கள்

இலங்கையின் அரசியலமைப்பின்படி வட மாகாணசபை வடக்கு மாகாணத்தில் தமது பணிகளை முன்னெடுக்க தேவையான அதிகாரங்களை நடுவன் அரசு வழங்கவேண்டும். இவற்றுக்கான சகல தடைகளும் நீக்கப்படவேண்டும். வடமாகாண சபையானது தமக்கு உரிய அதிகாரங்களை சுதந்திரமாக பயன்படுத்தும் சூழல் உருவாக்கப்படவேண்டும்.

12. கலை கலாசாரம் தொடர்பாக

அ. வடக்கின் இளைஞர்கள் பல்லின கலை கலாசாரத்தை பெரிதும் மதிக்கின்றனர், கௌரவிக்கின்றனர். இதேப்போல் தமக்கேயுரிய கலை கலாசாரம், பண்பாடு, மத விழுமியங்கள் மொழி மற்றும் விளையாட்டு போன்றனவற்றின் பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுகொள்கின்றனர்

ஆ. தத்தமது கலை கலாசாரம், பண்பாடு, மத விழுமியங்களை பின்பற்றவும் பேணவும் உள்ள சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் இதற்கான தடைகள் நீக்கப்படவேண்டும்.

மேற் குறிப்பிட்ட சகல பிரகடனங்களையும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் யாப்பிற்கிணங்கவும் மற்றும் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகள் அடிப்படையிலும் நடைமுறைப்படுத்த உரிய பொறிமுறைகள் கொண்டுவரப்படுவதோடு இவற்றை நடைமுறைப்படுத்த சம்மந்தப்பட்டவாகள் முன்வரவேண்டும். இது தொடர்பிலான பொது சேவைகளை மக்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் இதன் அரச உத்தியோகத்தர்களுக்கு இருக்கின்ற தடைகள் மற்றும் அரசியல் தலையீடுகள் பாதுகாப்பு தரப்பினரின் தலையீடுகள் நீக்கப்படல் வேண்டும். மேலும் இதற்கான சுயாதீனமான ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக செயற்படும் நிலைமை உறுதிசெய்யப்படவேண்டும்.

சுதந்திர பயண பிரகடனம் – 2014

2014.12.10ம் திகதி புதன்கிழமையன்று அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் வடமாகாணத்தின் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய ஜந்து மாவட்ட இளைஞர் பிரதிநிதிகள் 1500 பேர் ஒன்றிணைந்து சகலரதும் உறுதிமொழியோடு ‘சுதந்திர பயணம்’ இளைஞர் மாநாட்டில் சம்பந்தப்பட்டவர்களிடம் இவ் பிரகடனம் முன்வைக்கப்பட்டது.

Related Posts