சீரற்ற காலநிலை: வடக்கில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் 36 ஆயிரத்து 594 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 458 பேரே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 258 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 423 பேர், 32 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 143 வீடுகள் முழுமையாகவும் 3 ஆயிரத்து 291 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை யான் ஓயா வான் கதவுகள் அனைத்து இன்று திறக்கப்படவுள்ளன. ஆகையால் தாழ்நில பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம்” என அவ்வறிக்கையின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை அரசாங்கம், அரச தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் ஆகியனவும் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts