Ad Widget

சீனி லொறியுடன் கடத்தப்பட்ட தமிழர் கொலை

கொழும்பில் இருந்து 300 சீனி மூடைகளுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்த லொறியை இடைநடுவே கடத்துவதற்காக சாரதியும்,நடத்துநரும்,சீனி மூடைகளுக்கு பாதுகாப்புக்காக வந்த தமிழ் இளைஞரைக் காட்டுப் பகுதியில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து புதைத்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர் லொறியில் கொண்டு வந்த பொருள்களை அரைவிலைக்கு விற்றுக்காசாக்கியுள்ளனர். 19வயதுடைய மல்லாவி,வவுனிக்குளத்தைச் சேர்ந்த தி.துசாந்தன் என்ற இளைஞனே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளார்.

யாழ்.நகர் மற்றும் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் சிலர் இணைந்து கொழும்பிலிருந்து சீனிமூடைகள்,தேங்காய் எண்ணெய் போன்ற சுமார் 35 லட்சம் முதல் 45 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவர ஏற்பாடு செய்தனர்.

குறித்த பொருள்களை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வர டிரான்ஸ் போர்ட் நிறுவனம் ஒன்றை நாடியிருந்தனர் அதன்படி கடந்த 30ம் திகதி யாழ்.நோக்கி வந்தது

அந்த லொறியின் சாரதி,நடத்துநர் பெரும்பான்மை இனத்தவர்,பொருள்களின் பாதுகாப்புக்கு தமிழ் இளைஞர் ஒருவரும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த திகதியில் லொறி யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை. புத்தளம் பகுதிக்கு பின்னர் அவர்களுடைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது, இந்த விடயம் தொடர்பில் யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டது.

இதனையடுத்து தேடுதல் நடவடிக்கை நடத்திய பொலிஸார், லொறியின் நடத்துநரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி லொறியில் கொண்டு வரப்பட்ட பொருட்களை தானும் சாரதியும் அரைவிலைக்கு விற்றதாகவும், அதற்குப் பொறுப்பாக அனுப்பப்பட்ட தமிழ் இளைஞரை கொலை செய்து அனுராதபுரம்- புத்தளம் பகுதிகளுக்கிடையில் உள்ள காட்டில் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி குறித்த காட்டுப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் உயிரிழந்த தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Related Posts