நடிகர் சிவகார்த்திகேயனை நடிகர் கமல் ரசிகர்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவகார்த்திகேயனை இன்று ஞாயிற்றுக்கிழமை(20) காலை மதுரை விமான நிலையத்தில் வைத்து கமல் ரசிகர்கள் தாக்கியுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது தன்னை ரஜினி ரசிகர் என்றும் கமல் குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சிவகார்த்திகேயன்,விழா ஒன்றுக்காக மதுரை வருவதாக கேள்விப்பட்ட கமல் ரசிகர்கள், மதுரை விமான நிலையத்தின் வாசலில் காத்திருந்தனர்.
விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியதாகவும், அவர்களை சிவகார்த்திகேயனின் பாதுகாவலர்கள் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு எதிராக கமல் ரசிகர்களும், கமல் ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து சிவகார்த்திகேயன் ரசிகர்களும் டுவிட்டரில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்,நடிகர் கமல் ஹசான் ஆகியோர் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தனர்.
நடிகர் கமல் ஹாசன் கூறுகையில், எனது ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் உண்மையில்லை, தாக்குதல் நடந்தாக கூறப்படும் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. நானும் சிவகார்த்திகேயனும் மதுரையில் நிகழ்ச்சி முடிந்து ஒன்றாகத்தான் வருகிறோம் என்றார்.
இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, நான் நலமாகத்தான் உள்ளேன் என்றார்.