Ad Widget

சிங்கள மக்களின் சந்தேகம் தீரும்வரை தீர்வு சாத்தியமற்றது!

வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி என்பன அடையமுடியாத காரியமல்ல எனத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பேச்சுக்களிலும் அறிக்கைகளிலும் நடவடிக்கைகளிலும் ஏற்பட்ட சந்தேகமே அதனை எட்டமுடியாதிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் தரப்பினர் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகம் முற்றுமுழுதாக நீக்கப்படும் வரை எதுவும் செய்யமுடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென கூட்டமைப்பினர் பிரசாரம் செய்தமையே சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்ப்பதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தவறவிட்டு விட்டதாக ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பொறுப்பற்றவர்களின் தவறான கையாள்கையாலும் பிழையான அணுகுமுறையாலும் தமிழ் மக்களின் உரிமைகளும், சலுகைகளும் வேகமாக அழிந்து வருவதால் அவற்றை பாதுகாப்பதற்கு இலங்கையிலும் பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டிய காலம் வந்துவிட்டதென குறிப்பிட்டுள்ள ஆனந்த சங்கரி, தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நாடாளுமன்ற பதவியிலிருந்து நீக்குவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு காணப்படும் ஒரே வழியென மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts