Ad Widget

சாவகச்சேரியிலும் மக்கள் போராட்டம்!

land-regஇராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பிற்கு எதிராக சாவகச்சேரி நுணாவில் மத்தி பொதுமக்கள் இன்று காலை 10 மணியளவில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சாவகச்சேரி, நுணாவில் வைரவர் கோவிலுக்கு அருகாமையில் J/312 கிராமசேவகர் எல்லைக்குற்பட்ட 11 தனி காணி உறுதிகள் கொண்ட 7 ஏக்கர் காணிகளை கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் படையினர் ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காணி உரிமையாளர்களுக்கு திருநெல்வேலி பிரதேச நிலஅளவை காரியாலயத்தால் அறிவித்தல் கடிதம் 20-05-2014 அன்று திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதில் இலங்கை இராணுவத்தின் 7வது விஜயபாகு காலட்படைக்கு காணி சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் 02-06-2014 (இன்று) நிலஅளவைக் காரியாலயத்தில் இருந்து வரும் ஊழியர்களுக்கு தமது காணியின் எல்லைகளைக்காட்டுப்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று நில அளவை பணிகளை மேற்கொள்ள வந்த திணைக்கள அதிகாரிகளை அங்கு கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர்,உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது அதனைத் தொடர்ந்து நிலஅளவை பணிகளை நிறுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.

இன்றைய தினம் அச்சுவேலியிலும் இவ்வாறான சம்பவம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலியில் போராட்டம்!

Related Posts