Ad Widget

சாட்சியளிக்கும் இடத்திலிருந்து இராணுவம் நீக்கம்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள், இன்று திங்கட்கிழமை (29), கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், செயலகத்தை சூழ நின்றிருந்த இராணுவத்தினரை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு ஆணைக்குழு அதிகாரிகள் உத்தரவிட்டதை அடுத்து அவர்களில் அவ்விடத்திலிருந்து நீங்கியுள்ளனர்.

கடந்த 27, 28 ஆகிய திகதிகளில் முழங்காவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த சாட்சியமளிக்கும் நிகழ்வுகள், இன்று பூநகரியில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்போது, பூநகரி பிரதேச செயலக வளாகத்தைச் சூழ, இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் அதிகளவில் நடமாடித்திரிந்தனர். இதனால் அச்சம் கொண்ட மக்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் இது தொடர்பில் முறையிட்டனர்.

இதனையடுத்து, துரித நடவடிக்கை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அதிகாரிகள், அங்கு நின்றிருந்த இராணுவத்தினருடன் கலந்துரையாடி அங்கிருந்த அவர்களை அகற்றினர். இதனைத் தொடர்ந்து, சாட்சியமளிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

பூநகரி பிரதேச செயலகத்தில் சாட்சியமளிப்பதற்கு 8 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 50 பேர் திங்கட்கிழமை (29) அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts