Ad Widget

சர்வதேசப் பங்களிப்புடனான நிரந்தர தீர்வே அவசியம்! – சம்பந்தன் எம்.பி

வடக்கில் மாகாண சபை உருவாக்கப்பட்டு ஒரு வருட காலம் கடந்து விட்டது. ஆனால் இதுவரை வடக்கு மாகாண சபையின் சாதரணமான இயங்க்கத்துக்குக்கூட அரசு முட்டுக்கட்டையாக இருக்கினறது. – இவ்வாறு அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சர்வதேச பங்களிப்புடன் நிரந்தர அரசியல் தீர்வு காணப்படுவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

sampanthan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவின் சார்பாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர்களான ஹண்ட், சஞ்சஞ்காந்தி, இலங்கைக்கான அமெரிக்கப் பிரதித் தூதுவர், அரசியல் செயலாளர் அன்ட்ரூ சீ.மான் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போதே மேற்கண்டவாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பு தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில்:-

“இந்தச் சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்தது. இதன்போது நாம் பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகவும் – விளக்கமாகவும் – கலந்துரையாடினோம். குறிப்பாக யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள சூழ்நிலையில் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றுவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணிகள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுகின்றன. இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டு இருப்பதுடன் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாது மீள்குடியேற்றம் தொடர்ந்தும் முழுமையடைவதில் தாமத நிலைமை காணப்படுகின்றன இந்த விடயங்கள் குறித்து அவர்களுக்குத தெளிவுபடுத்தினோம்.

வடக்கு மக்களுக்காக வட மாகாண சபை உருவாக்கப்பட்டது. வட மாகண சபை தெரிவு செய்யப்பட்டு தற்போது ஒரு வருடம் கடந்த நிலையில் அதனை சுயாதீனமாக இயங்க முடியாது அரசு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி வருகின்றது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையை கைப்பற்றியபோதும் எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாதிருக்கின்றது. தொடர்ச்சியாக தடைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். இதன் மூலமே வடக்கில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதை எடுத்துரைத்தோம். தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படவேண்டியது அவசியமாகும். குறிப்பாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சர்வதேசத்தின் பங்களிப்புடன் நிரந்தர அரசியல் தீர்வு குறித்த ஆக்கபூர்வமான கருமங்கள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும் என அவர்களிடத்தில் வலியுறுத்தினோம்” – என்றார்.

Related Posts