Ad Widget

சம்பூரில் 818 ஏக்கர் காணி விடுவிப்பு! வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!!

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியில் முதலீட்டு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் 818 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சம்பூர் மக்கள் தமது காணிகளை நாளை வெள்ளிக்கிழமை முதல் பார்வையிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால கையெழுத்திட்டார் என்று சுமந்திரன் எம். பி.மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை சம்பூர் பகுதியில் அமைந்துள்ள விதுர கடற்படை முகாமை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கடற்படை வசமிருக்கும் 237 ஏக்கர் காணியை விடுவித்து அதனைப் பொது மக்களுக்கு வழங்க எடுக்கப்பட்டுள்ளது என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அரச திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் வேறு இடங்களில் மிகவும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். பாதுகாப்பற்ற வீடு, கல்வி கற்பதற்கு பொருத்தமற்ற சூழல், சுகாதாரமற்ற வாழ்க்கை என பல்வேறு பிரச்சினைகளுக்கு இவர்கள் நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர்.

கடந்த பத்து வருடங்களாக இத்தகைய துன்பங்களுக்கு இம்மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசு பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு முன்வந்துள்ளது. 237 ஏக்கர் காணிகளை விடுவித்து அதனைப் பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்நிலையில், குறித்த பகுதியில் கிட்டத்தட்ட 579 குடும்பங்கள் மீள்குடியேற முடியும். குறித்த மீள்குடியேற்றத்தை ஆறு மாதத்துக்குள் செய்து முடிப்பதற்கு எண்ணியுள்ளோம். இதற்காக மீள்குடியேற்ற அமைச்சு 120 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சினி குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மீள்குடியேறவுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார வளத்தைக் கட்டியெழுப்பவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். நன்கொடையாளர்கள், விவசாய அமைச்சு, மீன்பிடி அமைச்சு மற்றும் வெளிநாட்டு தனவந்தர்களின் உதவிகளை நாடியிருக்கின்றோம். எனவே, கூடிய விரைவில் சம்பூர் மக்கள் தமது சொந்த இடங்களில் வாழுவதற்கான சூழ்நிலை உருவாகும் – என்றார்.

Related Posts