Ad Widget

சம்பந்தனுக்கு பாதுகாப்பு வேண்டும்!! த.தே.கூ உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கோரிக்கை

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பாதுகாப்பான வதிவிடமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தற்போதுள்ள வதிவிடத்தில் எதிர்கட்சித் தலைவர் வசிப்பதாக வரவுசெலவுத் திட்டம் மீதான குழு நிலைவிவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எதிர்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனமும் கூட அடிக்கடி பழுதடைவதாகவும் ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.

கூலிக்கு கொலை செய்கின்ற கலாசாரம் மீண்டும் தலைதூக்குகின்றதோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கண்டி கல்ஹின்ன பகுதியில் அண்மையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையும் ஸ்ரீநேசன் இதன்போது நினைவுகூர்ந்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி, புத்த மதத்தின் புனிதத்துவம், தாற்பரியம், மகத்துவத்தையும் மீறும் வகையில் செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நல்லாட்சிக்கு கறையை ஏற்படுத்தும் வகையில் அவரின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் மீதான குழு நிலைவிவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பேணுகின்ற அமைச்சர், காலதாமதம் செய்யாமல் உடனடியாக குறித்த விகாரதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் போதுமான அளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதில் அளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, வாகனப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதுகுறித்து ஆராய்ந்துபார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related Posts