Ad Widget

சன்னங்களை தாங்கியவாறு வாழும் மாணவர்களுக்கு வைத்தியசாலை தேவை – சுரேஸ்

உடல்களில் சன்னங்களை தாங்கியவாறு வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வைத்திய வசதிகளை ஏற்படுத்த வடமாகாணத்தில் அதற்கான வைத்தியசாலையை அமைப்பதற்கு மத்திய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

suresh

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா வியாழக்கிழமை (26) நடைபெற்ற வேளையில் அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல மாணவர்களின் உடலில் சன்னங்கள் உள்ளன. அவற்றை எடுக்க வசதி வாய்ப்புக்கள் எதுவும் இங்கு இல்லை.

மாணவர்களின் உடலில் உள்ள சன்னங்களை வெளியேற்றும் வைத்திய வசதிகளை அரசாங்கம் செய்யவேண்டும். முன்னைய அரசாங்கத்திடம் இதனை கேட்க முடியாமல் இருந்தோம். மத்திய மலைநாட்டிலிருந்து வந்தவர் என்பதால் எங்கள் துன்பங்கள் தெரியும். ஆகையால், இந்த சன்னங்களை உடலில் தாங்கிய மாணவர்களுக்கான வைத்தியசாலையை வடமாகாணத்தில் அமைக்கவேண்டும்.

தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் முன்னர் பல்கலைக்கழகங்களில் இருந்தது. தற்போது பாடசாலைகளிலும் காணப்படுகின்றது. சர்வதேச மொழியில் கற்றுக்கொள்ள வேண்டும். நீண்டகாலமாக ஒரு யுத்தகாலத்துக்குள் இருந்தவர்கள். இழப்புக்களைச் சந்தித்தவர்கள். கணவர்களை, பிள்ளைகளை தேடியலையும் நிலையில் இருக்கின்றோம்.

யாழ், வன்னியில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு கட்டட, ஆய்வுகூட வசதிகள் தேவையாகவுள்ளது. குடிநீர், மலசலகூடம் இல்லாத பாடசாலைகள் இங்கு இருக்கின்றன. மாகாண கல்வி அமைச்சால் இதனை நடத்த முடியாது. மத்திய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Posts