Ad Widget

சனல்-4 வீடியோக்களில் உண்மைத் தன்மை உண்டு

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில், பிரிட்டனைச் சேர்ந்த “சனல்-4′ தொலைக்காட்சி வெளியிட்ட, “நோபயர் சூன்’ (போர் தவிர்ப்பு வலயம்) ஆவணப்படத்தில் காணப்படும் காட்சிகளில் உண்மைத்தன்மை இருக்கலாம் என்று மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போரின்போது காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. அந்த அறிக்கையிலேயே, போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களாக வெளியாகியிருக்கும் காணொலிகள் உண்மையானவையாக இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைகள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தில் காட்டப்பட்டன.

அவை போலியானவை, வேண்டும் என்றே சித்தரிக்கப்பட்டவை என்று இராணுவத்தினரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் நிராகரித்திருந்தனர்.

எனினும் அந்தக் காட்சிகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றும் அவற்றில் காணப்படும் காட்சிகள் உண்மையானவை என்று நம்புவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் பரணகம குழுவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன், இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பிஸ்கட் உண்ணக் கொடுக்கப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் ஒளிப்படங்கள் தொடர்பிலும் நம்பகத்தன்மை இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தளபதி கேணல் ரமேஷ் மற்றும் இசைப்பிரியா ஆகியோர் கொல்லப்பட்டமை தொடர்பிலான காணெலிகள் மற்றும் தொடர்பான ஒளிப்படங்களும் உ உண்மையானவையாக இருப்பதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன என்றும் அவை குறித்து முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts