Ad Widget

சட்ட விரோதமாகத் தொழில் புரிந்த ஐவருக்கு 89 ஆயிரம் ரூபா அபராதம்

சட்டவிரோதமான இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி கடலட்டை பிடித்த 4 பேரும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் ஒருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட குறித்த சந்தேகநபர்களுக்கு 89 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு யாழ்.நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.கேசவன் முன்னிலையில் கடந்த 3 ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கின் சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களில் கடந்த மாதம் 6 ஆம் திகதி 2 பேரும், 8 ஆம் திகதி 3 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் 17 ஆயிரம் ரூபா, 27 ஆயிரம் ரூபா என இரண்டு பேருக்கும் தலா 15 ஆயிரம் ரூபா வீதம் ஏனைய மூன்று பேருக்குமாக 89 ஆயிரம் ரூபா அபாரதம் விதித்தார்.

அத்துடன் தடைசெய்யப்பட்ட வலைகளை எரித்து அழிக்குமாறும் உத்தரவிட்டார். தடையில்லா உபகரணங்கள் மீனவர்களுக்கு மீளவும் கையளிக்கப்பட்டன. இந்த வழக்கு கடந்த மாதம் 25 ஆம் திகதி யாழ்.நீதிவான் பொ.சிவகுமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 5 படகுகளும் 25 லட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டன.

படகுகளுக்கு உரியவர்கள் சட்டத்தரணி மூலமாக நீதிமன்றில் நகல்பத்திரம் சமர்ப்பித்ததை அடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய 5 படகுகளும் கடற்படையின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. பின்னர் விசாரணைகளை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தன.

Related Posts