Ad Widget

சட்டத்திற்கு முரணாக நிலஅளவையாளர்கள் செயற்படுகின்றனர் – சுரேஸ் எம்.பி

சட்டத்திற்கு முரணாக செயற்படும் நிலஅளவை பணியாளர்களுக்கு ஆதரவாக சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் துணை போகக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இன்று வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்.

suresh

மாதகல், கோணாவளை பகுதியில் கடற்படை முகாம் அமைக்கும் நோக்குடன் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (19) முன்னெடுக்கப்படவிருந்த போது, அதனை பொதுமக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கிலே இராணுவ முகாம்களை அமைக்கும் நோக்குடன் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை தடுத்து நிறுத்த போராடுவோம்.

எனினும் நிலஅளவையாளர்கள், இங்கே காணி அளக்க வர இங்கே ஓடி வந்து மறிப்பதும், பின்னர் அவர்கள் இதை கைவிட்டு வேறு காணியை அளக்க வேறு இடத்திற்கு செல்ல அங்கேயும் ஓடி சென்று அவர்களை மறிப்பதுமாக கிளித்தட்டு விளையாட முடியாது.

காணி அளவீட்டு பணிகளுக்கு வரும் நிலஅளவை பணியாளர்கள் சட்டத்திற்கு முரணாக செயற்பட முனைக்கின்றனர்.

காணியை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீட்டு பணியை மேற்கொள்ள முனைந்தால், குறித்த காணி உரிமையாளரின் சம்மதம் பெறப்பட வேண்டும். அவ்வாறு சம்மதம் பெறப்படாமல் அக்காணிக்குள் நில அளவை பணியாளர்கள் உட்செல்ல முடியாது.

ஆனால், இங்கு காணி உரிமையாளர்களின் சம்மதமின்றி அவர்களது காணிக்குள் உட்பிரவேசித்து நில அளவை பணியாளர்கள் காணி அளவீட்டை மேற்கொள்ள முனைகின்றனர். இது சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும்.

இவர்களின் இச்செயற்பாட்டுக்கு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் பாதுகாப்பு வழங்கி துணை போகக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பால் காணி சுவிகரிப்பு முயற்சி மாதகலில் கைவிடப்பட்டது

Related Posts