Ad Widget

சட்டத்தரணி மணிவண்ணனுக்கு எதிராக சீடி ஒன்றை சமர்ப்பிகக பொலிஸார் முயற்சி!!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிரான வழக்கில் புதிய சான்றுப்பொருளாக இறுவெட்டு (சீடி) ஒன்றை இணைக்க பொலிஸார் சார்பில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் நிராகரித்தார்.

“வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட பின்னர் சான்றுப்பொருள் ஒன்றை இணைக்க பொலிஸார் முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது சட்ட ஏற்பாடுகளுக்கு புறம்பானது. எனவே சான்றுப்பொருளை இணைக்கும் விண்ணப்பத்தை மன்று நிராகரிக்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் சமர்ப்பணம் செய்தார்.

எதிரி தரப்பு விண்ணப்பத்தை ஆராய்த மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 486ஆம் பிரிவின் கீழ் அரச உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தி அவரது பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி மணிவண்ணனுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

எதிராளியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றில் முன்னிலையானார். அவர் சார்பில் சட்டத்தரணி மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் முன்னிலையானார்.

வழக்குத் தொடுனரான பொலிஸார் தரப்பில் பொலிஸ் தலைமையக சட்டப் பிரிவு சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்ட போது, சட்டத்தரணி வி.மணிவண்ணனின் உரை அடங்கிய இறுவெட்டை பேராசிரியர் இரட்ணஜீவன் கூல் ஒப்படைத்திருந்தார். எனினும் அதனைப் பொலிஸார் நீதிமன்றில் பாரப்படுத்தவில்லை.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இதுவரை நடத்தப்பட்ட எந்தவொரு வழக்குக்கும் தமது சட்டப் பிரிவு சட்டத்தரணியை அழைத்திராத பொலிஸார் இந்த வழக்கில் மன்றுக்கு அழைத்திருந்தனர்.

அத்துடன், இதுவரை காலமும் மன்றில் சமர்ப்பிக்கப்படாத சான்றுப்பொருளான இறுவெட்டை மன்றில் முன்வைக்க முயன்றனர். எனினும் சட்ட ஏற்பாடுகளுக்கு புறம்பான காரணத்தால் பொலிஸாரின் முயற்சியை நீதிமன்று நிராகரித்தது.

Related Posts