Ad Widget

சசிகலாவின் பதவியேற்பு நிகழ்ச்சி இரத்து?

தமிழக ஆளுநர் மும்பைக்கு சென்றதால், சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் இராஜினாமா செய்தார். இந்த இராஜினாமாவும் ஆளுநரால் ஏற்கப்பட்டது. தற்போது அடுத்த அமைச்சரவை பதவியேற்கும் வரையில், தமிழக முதல்வராக பன்னீர்செல்வமே தொடர்கிறார்.

சட்டப்படி, தமிழக ஆளுநரிடம், சசிகலா தனக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும் வகையில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை அளிக்க வேண்டும். தொடர்ந்து, ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோர வேண்டும். அதை ஏற்று, ஆளுநர் பதவியேற்பு திகதியை உறுதி செய்து ஆட்சிப் பொறுப்பேற்க அழைப்பார். தொடர்ந்து, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

நேற்று காலை முதலே, தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர். இதையடுத்து, விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

அதேபோல், தமிழக அரசின் பொதுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் தலைமைச் செயலகத்திலேயே இருக் கும்படி பணிக்கப்பட்டனர். திகதி மற்றும் நேரம் குறிப்பிடப்படாமல் பதவியேற்புக்கான அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் வருகையைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், தமிழக ஆளுநர் நேற்று இரவு வரை சென்னை வரவில்லை. நேற்று முன்தினம் கோவையிலிருந்து டெல்லி சென்ற அவரது சென்னை வருகையை எதிர்பார்த்து அதிமுக காத்திருக்கிறது. ஆளுநர் நிகழ்ச்சிப்படி, அவர் இன்று (7) கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வேண்டும். அதற்காக அவர் நேற்று இரவு சென்னை அல்லது கோவைக்கு வரவேண்டும்.

எனவே, சென்னை அல்லது கோவையில் எங்கு வேண்டுமானாலும் ஆளுநரை சந்திக்க சசிகலாவும், மூத்த அமைச்சர்களும் தயாராக இருந்தனர். ஆனால், இரவு 9 மணி வரை ஆளுநர் வருகை தொடர்பான எந்த தகவலும் வரவில்லை.

இதற்கிடையில், பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழ் நேற்று இரவு வழங்கப்பட்டது. அதில் ஆளுநர் பெயர் இடம்பெறவில்லை. இதனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ் கோவை செல்லவில்லை என்பது தெளிவாகிவிட்டது. அதேநேரம் இரவு 9 மணி வரை ஆளுநரின் சென்னை பயணமும் இறுதி செய்யப்படவில்லை.

இதனிடையே டெல்லியில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், நேராக மும்பை சென்றுவிட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்று நடைபெறுவதாக கூறப்பட்ட சசிகலா முதல்வராக பதவி யேற்கும் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனால் சசிகலா எப்போது முதல் வராக பதவியேற்பார் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை என இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

Related Posts