சித்தங்கேணி, சங்கானை ஆகிய இடங்களில் இரு வீடுகளில் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு, மற்றும் கம்பிகளால் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 2 மணியளவில் சித்தங்கேணி சிவன் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்குள் கொள்ளையர்கள் பின்புறம் இருந்த கதவை உடைந்து கொண்டு உட் சென்றுள்ளனர்.
மின்சாரத்தை துண்டித்து விட்டு வீட்டில் இருந்தவர்கள் மீது அவர்கள் வாள் மற்றும் கொட்டன்களால் தாக்கியுள்ளனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் காயமேற்பட்டு கீழே விழுந்ததும், அங்கிருந்து ஒரு இலட்சம் ருபா பணத்தையும் நகைகள் சிலவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்கள்.
இதன் போது அருகில் இருந்த வீட்டுக்காரர் ஒருவர் அவ் வேளை மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்துள்ளார். கொள்ளையர்களை கண்ட அவர் அவர்ளை மடக்கி பிடிக்க முற்பட்ட போது கொள்ளையர்கள் அவரை தாக்க முற்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று தம்மை பாதுகாத்து கொள்ள ஆயுதமொன்றை எடுத்துவர செல்லவே கொள்ளையர்கள் அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் தாம் வந்த துவிச்சக்கர வண்டிகள் இரண்டை அவ்விடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அக் கொள்ளை கும்பல் சங்கானை தெற்கு பகுதிக்கு சென்று அங்கும் ஓர் வீட்டில் 85ஆயிரம் ருபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குறித்த வீட்டிலும் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கொட்டன்களால் தாக்கி வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். ஏனினும் வீட்டில் இருந்தவர்கள் கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட போதும் அவர்களிடமிருந்து கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இதேவேளை சித்தங்கேணி பகுதியில் இருந்து களவாடிய வரப்பட்ட மோட்டார் சைக்கிளை சங்கானையில் உள்ள வைரவர் ஆலயத்துக்கு பின்புறம் விட்டுச் சென்றுள்ளதுடன் கொள்ளைக்கு பயன்படுத்திய வாள் மற்றும் கொள்ளையர்களில் ஒருவர் அணிந்திருந்த மூகத்தை மூடும் கறுப்பு துண்டு என்பவற்றையும் கோவில் வளாகத்திலே போட்டுச் சென்றுள்ளனர்.