Ad Widget

கோரோனா வைரஸ்!!! சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் கண்காணிப்பு

இந்தியாவில் கோவிட்-19 (கோரோனா) வைரஸ் வேகமாக பரவி வருவதால் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 3,100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கெனவே, கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர் சீனா, ஹாங்காக், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், இத்தாலி, ஈரான், கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் 28 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் மேலும் மூன்று பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவில் இதுவரை 6 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்களின் குருதி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.

யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளை பரிசோதனை செய்ய கூடுதலாக மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்- என்றனர்.

Related Posts