Ad Widget

கொரோனா வைரஸ் தொற்று – இலங்கைப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையிலும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்க உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், இலங்கைப் பெண்ணொருவர் தொற்று நோய் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளாரென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

30 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, அந்த யுவதிக்கு பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில், அவர் தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொற்று நோய் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அந்த யுவதி, அஹுங்கல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் ஊழியர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரியைச் சேர்ந்த நபர் ஒருவரின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் அனோஜ் ருத்திகோ தெரிவித்துள்ளார்.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் குறித்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை ​எனைய நோயாளிகள் இருக்குமிடத்திலிருந்து வேறுபடுத்தி வைத்து சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவரது இரத்த மாதிரிகளை கொழும்பில் பரிசோதனைக்குட்படுத்தி அனுப்பிய பின்னரே உறுதியான தீர்மானத்துக்கு வரமுடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts