Ad Widget

கைதிற்கு எதிராக பல்கலைகழக மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் இன்று சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டக்களப்பு பண்ணையாளர்கள் சித்தாண்டியில் நடத்தும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

இதன் பின்னர், யாழ்ப்பாண பல்கலைகழகத்தை சேர்ந்த 5 மாணவர்களும், கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவனுமாக 6 பேரை பொலிசார் கைது செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக அவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

அவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். எனினும், நேற்று மாலைக்குள் அவர்களின் பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாததால் அவர்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாணவர்கள் சித்தாண்டி போராட்டக்களத்துக்கு வந்தனர். அங்கு போராட்டம் நடத்துபவர்கள், மாணவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர். அங்கு மாணவர்களுக்கு மதிய போசனமும் வழங்கப்பட்டது.

பின்னர் மாணவர்கள் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்று, பொலிசார் தம்மை கைது செய்தமைக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்கிறார்கள்.

Related Posts