Ad Widget

கைதிகளின் கதையைக்கேட்டால் நீங்களும் கண்ணீர் சிந்துவீர்கள்

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கத் தவறின் ஏற்படப்போகும் அனர்த்தத்துக்கு, ஜனாதிபதி தொடக்கம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் பதில் கூற வேண்டிவரும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர், விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு, கடந்த வெள்ளிக்கிழமை சென்று உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளான கணேஷன் தர்ஷன், மதியரசன் சுலக்ஷன் ஆகிய இருவரோடு, ஏனைய ஐவரையும் சந்தித்து உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது.

எதுவித தவறும் செய்யாத பலர், எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி அவர்களே, இக்கைதிகள் சம்பந்தமான உண்மை நிலை, தங்கள் கவனத்துக்கு இதுவரை கொண்டுவரப்படவில்லை என்பதை உணர்கிறேன். தடுத்து வைக்கப்பட்டுள்ள பலரில் அநேகர், ஒரு நிமிடமேனும் தடுத்து வைக்கக்கூடிய எக்குற்றத்தையும் செய்யாது, ஐந்து, பத்து மற்றும் பதினைந்து ஆண்டுகள் என்று நீண்டநாட்கள் கொடுமையை அனுபவிக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். ஒரேயொரு தடவை, கைதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிலரை அதிகாரிகள் மூலம் நீங்கள் வரவழைத்து மனம் விட்டு பேசும்போது உங்கள் கண்ணில் இருந்து கண்ணீர் சிந்தாவிட்டால், நான் இந்தப் பிரச்சினையில் இனி தலையிடாது ஒதுங்கி விடுகிறேன் என கூறிவைக்க விரும்புகிறேன்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts