Ad Widget

கேப்பாப்புலவு உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் 3 நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்கள் தங்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனக்கோரி வியாழக்கிழமை (24) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நேற்று சனிக்கிழமை (26) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற இந்த உண்ணாவிரதத்தை நிறைவு செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் நேரில் சென்று கோரியதையடுத்து உண்ணாவிரத போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ் உண்ணாவிரதத்தை நிறைவு செய்யுமாறும் ஒரு வார காலத்துள் 3 பேர் கொண்ட குழுவை நியமித்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிப்பதாகவும் இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவித்து 3 மாதத்துள் தீர்வு காண்பதாகவும் வடமாகாண முதலமைச்சர், சனிக்கிழமை (26) வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மூலம் உறுதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts