Ad Widget

கெஞ்சியபோதும் கண் முன்பாகவே வீடுகளை இடித்து அழித்தனர் படையினர்!

தமது வீடுகளை உடைக்க வேண்டாம் என்று படையினரிடம் கெஞ்சியபோதும் தமக்கு மேலிடத்து உத்தரவு கிடைத்துள்ளது எனத் தெரிவித்து வீடுகளை அவர்கள் இடித்து வருவதாக வலி.வடக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் முறைப்பாடு செய்தனர்.

தொண்டமானாறு தொடங்கி காங்கேசன்துறை வரை படையினர் அமைத்துள்ள நிரந்தரப் பாதுகாப்பு வேலியோடு அமைந்துள்ள வீடுகளே இவ்வாறு இடித்தழிக்கப்பட்டு வருவதாக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தனிடமும் மேலும் தெரிவித்தனர்.

வலி.வடக்கில் இருந்து 23 வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் 7 ஆயிரத்து 60 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 328 பேர் வாழ்ந்து வருகின்றனர். தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி அந்தப் பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு படையினர் அனுமதிக்கவில்லை.

ஆனால் படையினர் வசமுள்ள மக்கள் காணிகளில் விவசாய நடவடிக்கை, “யோக்கட்’ உற்பத்தி தொழிற்சாலை எனப் பலவற்றைப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லையில் தொண்டமானாறு தொடங்கி கட்டுவன், ஒட்டகப்புலம், காங்கேசன்துறை வரையில் படையினர் நிரந்தரப் பாதுகாப்பு வேலியை அமைத்துள்ளனர்.

இந்த நிரந்தர பாதுகாப்பு வேலியின் உள்ளே மண் அணை காணப்பட்டது. இந்த மண் அணையை “புல்டோசர்’ மூலம் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதன்போது இதனுள் அகப்படும் வீடுகளும் இடித்தழிக்கப்படுகின்றன.

கட்டுவன் பகுதியில் நேற்றுப் படையினர் வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் அதன் போது இரண்டு வீட்டு உரிமையாளர்கள் அந்த இடத்துக்குச் சென்று தமது வீடுகளை இடிக்க வேண்டாம் என்றுபடையினரிடம் கெஞ்சிய போதும் மேலிடத்து உத்தரவு எனத் தெரிவித்து வீட்டு உரிமையாளர்கள் முன்பாகவே அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

சம்பவ இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் ஆகியோர் நேரடியாகச் சென்றனர்.

இதன் போது மக்கள் நாடாளு மன்ற உறுப்பினரிடம் படையினரின் அடாவடித் தனமான செயற்பாடுகள் குறித்து அழுது அழுது முறைப்பாடு செய்தனர். மக்களின் முறைப்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் படை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

அத்துடன் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குச் சென்று பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனனுடனும் கலந்துரையாடினார். இது தொடர்பாக அரச அதிபரின் கவனத்தும் கொண்டுவந்தார்.

Related Posts