Ad Widget

கூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்படிக்கைகளும் இல்லை: ஐக்கிய தேசிய கட்சி

ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றதே ஒழிய வேறு எவ்வித இரகசிய உடன்படிக்கைகளும் அக்கட்சியுடன் மேற்கொள்ளவில்லையென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு அவர்களிடையே செய்துகொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கையே காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“நல்லாட்சிக்கு தலைமை தாங்க வேண்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கள்ளர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் தற்போது தலைமை தாங்கி வருகின்றார்.

மேலும் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனநாயகத்துக்கு முரணாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஜனாதிபதி தெரிவு செய்து, சட்டத்துக்கு முரணாக புதிய அமைச்சரவை உருவாக்கி ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்பட்டார்.

இருப்பினும் அப்புதிய அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

அந்தவகையில் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அரசியமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர்.

ஆனால், மஹிந்த அணியினர் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்” என லக்ஷமன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Related Posts