Ad Widget

குற்றவாளிகள், தம்மைத்தாமே விசாரிப்பதை த.தே.கூ ஏற்காது – சுரேஸ் பிரேமச்சந்திரன்

குற்றம் செய்தவர்களே தங்களை விசாரிக்கும் நடவடிக்கையை தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதேபோல், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் உள்ளக விசாரணை நடத்தப்படுகின்றமையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவுள்ள ஐ.நா. போர்க்குற்ற விசாரணை அறிக்கையில் உள்ளக பொறிமுறையில் விசாரணை செய்வதற்கான ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே சுரேஸ் இவ்வாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்து கூறுகையில்.

‘இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவுள்ளது. அந்த அறிக்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பல விடயங்கள் குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

அந்த விசாரணை அறிக்கையில் உள்ளக பொறிமுறையை உள்ளடக்கிய ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளதாக சில கருத்துக்கள் தற்போது சொல்லப்பட்டு வருகின்றன. அறிக்கையிலுள்ள விடயங்கள் கசிந்துள்ளாக செய்திகளும் வெளியாகியுள்ளன.

அதன் உண்மைத் தன்மையை நாங்கள் அறியவில்லை. அறிக்கையிலிருந்து கசிந்த மேற்படி விடயம், உள்ளக விசாரணையென்பதாக இருந்தால் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஐ.நா விசாரணை அறிக்கை சரியான முறையில் நடைபெறவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். யுத்தக் குற்றங்கள் நடைபெற்ற நாடுகளில் ஆணைக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு விடயங்கள் விசாரிக்கப்பட்டன.

சர்வதேச விசாரணையின் அடிப்படையில் யுத்தக்குற்றங்களை கையாளுகின்ற நிலை பரவலாகவுள்ளது. இலங்கையின் உள்ளகப் பொறிமுறையின் மூலம் இலங்கையின் போர்க்குற்ற பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியாது.

இலங்கையில் இடம்பெற்ற உள்ளக விசாரணை முறைகேடுகளில் முடிந்தமைக்கு, திருகோணமலையில் 5 மாணவர்கள் கொலை விசாரணை, மூதூரில் 18 பிரெஞ் பணியாளர்கள் கொலை வழக்கு விசாரணை ஆகியவற்றை குறிப்பிடலாம்’ என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறினார்.

Related Posts