Ad Widget

குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட அமைச்சர்களும், வாக்குமூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்!

வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்னர் அது தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

நேற்றயதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலமைச்சருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் உரித்தான கௌரவத்தை பாதுகாப்பதாக இருந்தால் வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுடனேயே அவர்கள் தமது பதவியை விலகியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

அமைச்சர்கள் பதவி விலகாது எப்படி விசாரணைக் குழு சுயமாக சுதந்திரமாக விசாரணை செய்திருக்க முடியும். சரி தற்போது அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை கிடைக்கப்பட்டுள்ளது. இனியாவது அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.

அத்துடன் ஏனைய அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த உறுப்பினர்கள் விசாரணை குழுவில் சாட்சியமளிக்க செல்லாத நிலையில் அவர்கள் மீதான செயற்பாடு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதாவது இவர்கள் தாம் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்காமையானது இவர்கள் யாரிடமாவது கையூட்டு பெற்றுக்கொண்டு சாட்சியமளிக்காது ? இல்லை பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எது எவ்வாறிருப்பினும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி விட்டு சாட்சியமளிக்க செல்லாத வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்.

போராளிகள் இன்று அநாதரவாக சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக இன்று காணப்படுகின்றார்கள். அவர்களது நல் வாழ்க்கைக்கு யாரும் இன்று உதவி செய்யவில்லை. நாம் உதவி செய்வதாக கூறியவர்கள் ஒரு சிலருக்கு சில உதவிகளை செய்துவிட்டு அதனை புகைப்படம் எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டு அத்தோடு நிறுத்தி விட்டார்கள். இவ்வாறன நிலையில் நான் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரிடமும் ஓர் கோரிக்கையை முன்வைக்கின்றேன். அதாவது மாகாண சபைகளின் உறுப்பினர்கள் அனைவரும் தமக்கு கிடைக்கின்ற வாகன கொள்வனவிற்கான பணத்தை போராளிகள் காப்பகத்திற்கு வழங்க வேண்டும் என நான் கோரிக்கைவிடுகின்றேன்.

Related Posts