கடந்த 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) முன்னாள் தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் நிறுவுவதற்குப் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இவர்களின் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி குறித்த உருவச்சிலையைத் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரான சதீஷ் என்பவரை வல்வெட்டித்துறைப் பொலிஸார் நிலையத்திற்கு அழைத்துக் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, வழக்கு விசாரணை இன்றைய தினம் மீண்டும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் மன்றில் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
இருபக்க வாதங்களையும் செவிமடுத்த கௌரவ நீதவான், எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை குறித்த இடத்தில் உருவச்சிலையை நிறுவும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.