Ad Widget

குடியரசு தின கொண்டாட்டம்!! மெரினாவில் கோலாகலம்!!

இந்திய நாட்டின் 68வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தேசியக் கொடியை ஏற்றினார். முப்படை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார்.

குடியரசு தினத்தன்று காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர்ராவ் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பதால் குடியரசு தினவிழாவில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கொடியேற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்திற்கு கூடுதல் பொறுப்பில் இருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் கொடியேற்ற வேண்டியிருப்பதால் தமிழகத்தில் முதன்முறையாக குடியரசு தினத்தன்று ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் கொடியேற்ற உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதற்கேற்ப குடியரசு தின அணி வகுப்பு நிகழ்ச்சிக்காக மெரினா முழு வீச்சில் தயாராகியிருந்தது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக மூத்த தலைவர் துரைமுருகன் போன்றோர் 7.30 மணிக்கெல்லாம் மெரினா சென்றுவிட்டனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காலை 8 மணியளவில் காந்திசிலை பகுதிக்கு வந்தார். அங்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு முப்படையினரின் அணி வகுப்பு மரியாதையை அவர் ஏற்றார்.

இதன்பிறகு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர். வீரதீர விருது பேர்ணாம்பட்டை சேர்ந்த துர்காதேவிக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இக்ரம் பெற்றார்.

வேளாண்துறை சிறப்பு, நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த சங்கர நாராயணனுக்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் பதக்கம் நாகை மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்பி தங்கதுரைக்கு வழங்கப்பட்டது.

காந்தியடிகள் பதக்கம் வடக்கு சென்னை மத்திய புலனாய்வு பிரிவு டிஎஸ்பி ஜீவானந்தம் பெற்றார். காந்தியடிகள் காவலர் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதன்பிறகு விருது பெற்றவர்கள் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதையடுத்து மாணவ, மாணவியரின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Related Posts