Ad Widget

குடிநீர் திட்டத்துக்கு மீனவர் சமாசம் எதிர்ப்பு

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி மற்றும் தாளையடி கடல் பிரதேசத்திலிருந்து நீரைச் சுத்திகரித்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி, வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சங்கத் தலைவர் பொ.பிரேமதாஸ் தெரிவித்தார்.

சமாசத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மணற்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையுற்ற 15 கிளைச் சங்கங்கள் ஊடாக கையெழுத்துச் சேகரிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு, மருதங்கேணி, தாளையடி கடல் பிரதேசங்களிலிருந்து, கடல்நீரை சுத்திகரித்து குடிநீரை யாழ்ப்பாணத்துக்கு வழங்கும் திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் செயற்படுத்த திட்டமிடப்படுள்ளது.

இந்த திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் குழுவொன்று ஆராய்ந்து வருகின்றது.

இந்நிலையில், இத்திட்டத்தால் இந்தப் பிரதேச மக்களுக்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படவிருப்பதாகவும் இதனை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச மக்களின் கையொப்பம் பெற்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், யாழ்.மாவட்டச் செயலாளர், ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் ஆகியோரிடம் கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts