Ad Widget

கிழக்கு ஆளுநர் நியமனம் இனவாதத்தினை வளர்க்கும்: சீ.வி.கே.

மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள ஆளுநர் நியமனமானது இனவாதத்தினை வளர்க்கும் என வட.மாகாண அவைத் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இனக்குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது இன ஐக்கியத்திற்கு வித்திடாது. இந்த செயற்பாடு இனக்குரோதத்தை வளர்க்கும் செயற்படாகவே பார்க்கப்படும்.

வட.கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் சிங்கள மொழி பேசும் ஆளுநரே நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தற்போது, தமிழ் பேசும் முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அது வரவேற்கத்தக்கது.

ஆளுநரை நியமிப்பதென்பது ஜனாதிபதியின் அதிகாரம், அது அவரின் உரிமை. கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழும் ஒரு மாகாணம். இனக் குரோதம் உடையவர் என தன்னை அடையாளம் காட்டிய ஒருவரை ஆளுநராக நியமிப்பது இன ஐக்கியத்திற்கு வித்திடுவதாக இருக்காது.

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹில்புல்லா வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால், இரத்த ஆறு ஓடும் என கடந்த காலங்களில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதேவேளை, வட.மாகாணத்திற்கென நியமிக்கும் ஆளுநரை, மாகாணத்தின் நிர்வாகம் தொடர்பாக தெரிந்துகொண்டவராகவும், தமிழ் மக்களோடும், தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஒத்துழைத்து செயற்படக்கூடியவராகவும் இருக்க வேண்டும்” என சீ.வி.கே.சிவஞானம் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts